நினைத்தால் சிரிப்பு வரும் நெகிழ்வு

#டைரிக்குறிப்பு 
23.05.2021

இப்போது எனக்கு தினசரியில் வேலை. சதா கட்டுரைகளையும், செய்திகளையும் மாய்ந்து மாய்ந்து எழுதும்/திருத்தும் பணி. 4 வருடங்களுக்கு முன்பும் என் கனவு இதுதான். ஆனால், அதற்கேற்ற ஆற்றல் என்னிடம் இல்லாமல்தான் இருந்தது. 

என்னைக் கவிதை என்னும் வடிவத்தை விட்டு வெளியே வரவைத்த இரு ஆளுமைகள் பத்திரிகையாளர் ஹரன் மற்றும் நாடறிந்த நாடக நடிகர் கிரேசி மோகன். ஹரன், எனது முதல் கட்டுரையை ஹிந்து மித்ரன் பத்திரிகையில் பிரசுரம் செய்தார். கிரேசி மோகன் கடைசிவரை என்னைக் கதை எழுத உந்திக் கொண்டே வைகுண்டம் சேர்ந்தார். இருவரையும் இக்கணத்தில் நினைத்துக் கொள்கிறேன். 

காரணம்? 

2016 வாக்கில் நான் முதன்முதலில் திருவல்லிக்கேணி சென்று பாரதியார் இல்லத்தையும், பார்த்தசாரதி கோயிலையும் தரிசித்த அனுபவத்தை கிரேசி மோகனுக்கு அவர் பாணியில் விவரித்து எழுதியிருந்தேன். அந்த மெயில் இன்று என் கண்ணில் சிக்கியது. அவருக்காக #எக்ஸ்க்ளூசிவ் போட்ட அந்த கட்டுரையையும், அதற்கு கிரேசி மோகன் பதிலையும் பகிர்கிறேன். 

--நான் அனுப்பிய கட்டுரை--

வணக்கம் மோகன் ஸார்.. எதோ என்னால் இயன்றது... பார்த்து கருத்தளிக்கவும்... Exclusively for Crazy Mohan. 

கண்டேன் மீசையை

ஆஹா.... இதோ ஜங்கென்று குதித்து வருகிறேன் ஒரு நவீன அனுமன் (மன்னிக்கவும் HUMAN என்றே வைத்துக்கொள்ளுங்களேன்...) இணையவில் ஏந்தி நாடோறும் பதிவுக் கணைகள் பாய்ச்சுகின்ற கலியுக ராம ராவணர்களே (நமக்கெதுக்கு வம்பு "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே" ஆ ஜங் ஆ ஜங் {அனுமன் இல்லே அதான் இந்த ஆட்டம்}) இன்று நான் "கண்டேன் மீசையை"...ஆம் நான் கண்ட பல மீசைகளில் முறுக்கிய மீசைகள் மூன்றினைப் பற்றிய பதிவு இது (மூனாவுக்கு மூனா....எஸ்.வி.சேகர் பாணியில்)...என்னோடு குதிக்க...ஆ ஜங் ஜங்

பறக்க இயலாத இந்த அனுமன் (ஆன human) என் ரிஷ்யமுக பர்வதமான மடிப்பாக்கத்திலிருந்து ஒரு பெரும் தொங்குகிற கூட்டத்துடன் எம்பி எம்பி M1 ஏறினேன்...தொங்கின படியாகவே வேளச்சேரி இரயில்நிலையம் அடைந்தேன். அங்கிருந்து திருவல்லிக்கெணிக்கு எப்படிப் போவதென்று திகைத்திருந்த சமயம் என் பலமான மின்சார இரயிலை எனக்கே உணர்த்தினார் Internet என்கிற இணைய ஜாம்பவான்...ஆஆஹா! உடனே டங்கென்று பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு டிங்கென்று இரயிலில் பறந்தேன் (அதெப்படி இரயிலில் பறக்க முடியும் ? Simple அது தான் பறக்கும் இரயிலாயிற்றே...) 

வேளச்சேரியில் இருந்து மின்சார இரயிலில் பறந்த இந்த அனுமனுக்கு அழகான இலங்கைக் கடற்கரை போலத் தென்பட்டது கேணியின் கடற்கரை (அதாம்பா கேணின்னா திருவல்லிக்கேணி). அங்கே சென்றதும் மனம் என்கிற குரங்கு ஜங்கு ஜங்கென்று குதிக்கத் துவங்கியது. (இந்த கவிக்குரங்கின் தகப்பன் வாழ்ந்து கவிதை தந்த ஊராயிற்றே...) அங்கே சென்றதும் என் நாதன் துவாபர யுகத்திலே தோற்றமெடுத்த அவதாரத்தைக் கண்டிட ஓடோடிச் சென்றேன் ( வழிகேட்டுக் கேட்டுத் தான்)

அங்கே சென்றால் எழில் மிகுந்த கோயில் கோபுரம்..உள்ளே மிகுந்த ஆவலுடனும் ஆரவாரத்துடன் நுழைந்த அனுமனுக்கு முதலில் தரிசனம் கொடுத்தது அந்த என் பெருமாளையே ஆட்டுகிற வேதவல்லித் தாயார் தான்..அவள் திவ தேக ஸ்வரூபத்தை கண்களில் மூட்ட முட்ட ஏற்றிக் கொண்டு ஒரு சுற்று வலம் வந்தேன்.. அங்கு தான் அடியேன் கண்டேன் மீசையை....

கன்னங் கரிதெனக் கார்மேகத் தோற்றமுடைய என் கடவுளானவன், சென்னை வெப்பத்தை மறக்க வைத்தான்...குளிர் தென்றல் வீசும் அறையில் குறை தீர்க்கும் வேங்கடவன் ஆனந்தப் பார்வை இந்த அறைகுரை அனுமன் மீது வீசி ஆசி வழங்கினான்...எங்கும் நான் காணாத அந்த முதல் முறுக்கு மீசையை என் நாதன் முகத்தில் கண்டேன்...ஆஹா...அடியேன் "கண்டேன் மீசையை"

மற்றொரு மீசை என்னுள் பல ஆசைகளை வளர்த்த மீசை....தமிழென்னும் தங்கப்பெண் விரும்பி ஏற்ற வீர மீசை..ஆம் என் கவித்தகப்பன் மகாகவி பாரதியின் மீசை...அந்தக் கோயிலிருந்து வெளியில் வந்து பின்புறமாக நடந்து சென்றேன்..ஒரு திடீர் வளைவு திரும்பி நடக்கையில் ஒரு கணம் நின்று என்னை மறந்தேன்..என் கவித்தகப்பன் வாழ்ந்த வீட்டை அங்கு கண்டேன் வாசலில் இருந்த அவனது சிலையின் மீசையும் என்னைக் கவர்ந்து அவன் பால் என்னை மறந்து பார்க்க வைத்தது...அந்த தங்க நிறத் தமிழரசன் சிலையை கண்டு கண்டு களிக்கும் மனம்..அங்கும் அடியேன்"கண்டேன் மீசையை"

மூன்றாவது மீசை சற்றே வித்யாசமானது..அங்கெ ஒரு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மறுபடியும் என் ரிஷ்யமுக பர்வதம் விரைய அங்கு உள்ல விரைவு வண்டியை நாடி நடந்தேன்..(விரைவு வண்டி = மின்சார இரயில்..) மின்சார இரயிலேரி மிடுக்காக அமர்ந்து கண்ட இரு மீசைகளின் காட்சிகளை கருத்தில் மீண்டும் மீண்டும் வரவழைத்து அசைபொட்டுக் கொண்டிருந்தேன்.. வேளச்சேரி வந்ததும் நானமர்ந்த இருக்கையின் ஜன்னலில் எதேச்சையாக முகம் பார்த்தேன்..அங்கே தளிராக முறுக்கப்பட்டிருந்த என் மீசையைக் கண்டேன்...கண்ட இரு மீசைகள் மேலும் அளவற்ற ஆசை கொண்ட எனக்கு என் மீசையின் முறுக்கைக் கண்டதும் சிரிப்பு தான் வந்தது..இப்படியே ஜங்கு ஜங்கு என்று ஆடியபடியே சிரித்துக்கொண்டு மீண்டுமொரு M1 ஏறி வீடு வந்து சேர்ந்தேன்...சேர்ந்ததும் இரண்டு வெண்பா எழுதினேன்....

இதோ..

பார்த்தனவன் சாரதிக்கும் பாரதிக்கும் ஒற்றுமையைப்
பார்த்தவனாம் இங்கே பகருகிறேன் - சேர்ந்தயிடம்
செய்வேலை கொண்ட செழிப்பான மீசைமற்றும்
உய்தநிலை எல்லாமே ஒன்று!

பார்த்தனின் சாரதியில் பாங்காய் முதலெழுத்தும்
சேர்த்த இறுதி இரண்டெழுத்தும் - பேர்த்தெடுத்தால்
பாரதி வந்திடுவான் பார்த்துணர்ந்தேன் ! யிங்குவிவேக்
பாரதி சொன்னேனப் பாங்கு! -விவேக்பாரதி!

--கிரேசி மோகனின் பதில்--

அன்பு விவேக், ஆர்டிகிள் அபாரம்..... இன்னும் செளஜன்யமாய், ஜனரஞ்சகமாய் இருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.... வீட்டுக்கு வந்ததும் அப்பா ‘’நாளைக்கு ஆவணி அவிட்டம்.... மீசையை எடுடா‘’ என்றார்... அப்பாவுக்கு பயந்து ‘’விண்டேன் மீசையை’’.... TWIST IN THE TALE.... இது போலவோ இல்லை வேறு ஏதாவதோ இருக்கலாம்.

இதே திருவல்லிக்கேணிக்கு பெருமாள் ‘கருட வாகனத்தின்’ போது சென்ற அடியேன் எழுதிய வெண்பாக்கள்....!

பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்

மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு....

நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி
உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை
கண்ணனை நெஞ்சே கருது....

அராப்பள்ளி சாய்ந்து அரங்கத்தை ஆளும்
பராத்பரா, பார்த்தன்தேர் பாகா -''மரா''சொல்லி
கானகத்து வேடன் கவியானான், நின்னருளால்
நானதற்(கு) இணையாக நல்கு....

பார்த்தனின் சாரதி பார்த்தன் பரிதவிக்க,
கீர்த்தனை செய்தனன் கீதையை, -தீர்த்தம்
திருவல்லிக் கேணி திகழ்பெரிய  தெய்வம்
கருமல்லிக் கண்ணனே காப்பு

பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்....

கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்....

திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்....

வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் - கீதவல்லி
ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
சாதகனென் சிந்தையில் சேர்.... கிரேசி மோகன்.

Comments

  1. மீசைக்காரர்கள் அல்லிக்கேணியின் அர்த்தங்கள்.

    அருமை நண்பா..!

    ReplyDelete
  2. அருமை.. மோஹன் அவர்களின் பெரிய ரசிகை நான்.தாங்கள் எழுதிய பாகத்தை இரு முறை படித்துப் பார்த்தேன். புரியாமல் அல்ல. முதல் முறை தங்களின் குரலில் மறுமுறை கிரேஸி மோஹன் அவர்களின் குரலில். எத்தனை முறை கேட்பினும் புத்தம்புதிதாய் இருக்கும் அவரின் வார்த்தைகளை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts