ஔவை தமிழ்

காப்பு
தமிழரின் நெஞ்சில் தறமுடை எண்ணம்
கமழ்ந்திட வந்த கனியை- நமதரும்
ஔவைமூ தாட்டியை அன்பினால் பாடிடும்
பாவைக் கணபதியே பார்!!

ஔவை தமிழ்
(ஒருபா ஒருபஃது)

 
பாட வினிக்கும்! பதமும் சுவைக்கும்! படிக்கையிலே
கூட யிருந்து கொடுப்பது போலக் குரலொலிக்கும்!
தேட லிருந்து தெளியும் நிலையது தேவையெனின்
நாடுக நாடுக நந்தமிழ் ஔவை நலத்தமிழே! (1)

தமிழில் நமக்குத் தகுந்த மொழிகளைத் தாமளித்த
அமுத மெனச்சொல் அன்புக் கிழவிநம் ஔவைசொலை
நமது மனத்தின் நடுவினில் ஏற்றி நவநவமாய்த்
திமிரை யடக்கித் திறத்துடன் வாழத் தினமெளிதே! (2)

எளிய பதத்தில் உயரிய சிந்தனை ஏற்றிவைத்தாள்
அளித்த கவிக்குள் அதிசயம் ஆயிரம் பூட்டிவிட்டாள்
களியைக் கொடுக்கும் கவிதைச் சுவைக்கும் கனிமழலை
தெளிய வுரைக்கும் சிறிய வரிக்கும் சிறந்தவளே! (3)

சிறந்தவ ளேதமிழ் சிப்பியின் முத்து திரட்டியதில்
அறந்தனைக் கோத்தும் அறிவுரை சேர்த்தும் அளித்தவளே!
குறைந்த அடியில் குவலயம் கண்ட குறளமுதம்
நிறைந்திட சங்கம் நிகழ்த்தினள்! பெற்றனள் நெல்லியையே! (4)

நெல்லியை உண்டு நெடுநாள் இருக்க நிகழ்ந்ததுவும்
சொல்லினி தான சுவைமிகு பாடல் சொறிந்ததுவும்
அல்லனை துன்பம் அவிந்திடத் தூதை அளந்ததுவும்
வல்லிள மைதன் வனப்பை மறந்தவள் வன்மைகளே! (5)

வன்மைகொண் டங்கு வளைத்தவவ் வேந்தரின் வஞ்சினத்தைத்
தன்மைகொள் நெஞ்சத் தயிரியத் தாலும் தமிழினாலும்
மென்மை பொறுந்திய மேன்மொழி யாலும் மடக்கியங்கே
வன்முறை நேர்வதை மாற்றினள்! அன்பு வளர்புறமே! (6)

புறமுமோ ரௌவை புகழாத்தி சூடி புதுமையௌவை!
அறநெறி தந்தரோ ரௌவை! அணங்கா மிருவருக்கும்
மறவனைப் பேசி மணஞ்செய் வித்து மகிழ்ந்தவௌவை!
திறமிகு சங்கத் திரட்டினில் சீரிய தீண்டமிழே! (7)

தீண்டமிழ் நூல்வழி தீநுத லான்றன் திடமகவை
ஆண்டவ னேயென ஆட்கொள வேண்டி அகவல்சொலி
ஈண்டினி பாட இயல்தவ நூலை இயற்றிவைத்தாள்!
ஆண்டவர் யாரும் அடிபணிந் தேத்திய அன்பகமே! (8)

அகர மெடுத்தே அருமை கருத்தை அடுக்கியதில்
பகர மிடுக்கு பதியும் விதத்தில் பலப்பலவாய்ச்
சிகர மளக்கும் சிறுகடு கென்னச் சிறந்தவழி
நகர வுரைத்தனள் நல்லாத்தி சூடி நலம்பெறவே! (9)

நலம்பெற மக்கள் நயம்பெறப் பாடல் நமக்களித்துக்
குலப்பெரு மைதனைக் கூற வுதித்த குணவதியாம்
நிலம்பெரு மைகொள நின்று மறைந்த நிறைமதியின்
பலம்பெறு நற்றமிழ் பாருள நாமினி பாடுவமே!! (10)

-விவேக்பாரதி
10.02.2018

Comments

Popular Posts