சிவ மஹாராஜன்


ஏறி முடித்த குழலே இமயத் தெழில்மலைநீர்
ஆறு மிருக்கும் அழகே அரனே அதிசயத்தின்
கூறில் இருக்கும் குணமே இதமே குவலயமே
மாறும் மனத்தின் மகிமை உரைசிவ மன்னவனே! 


பம்பை அடிக்கும் பரனே பரிவே பலவெனவூர்
நம்பி இருக்கும் நகர்வே நளின நடனமிடும்
தும்பி இழுக்கும் மலரே புதிதே துணையெனவே
அம்புவி காக்கும் அழலே அரசே அரசிவனே!

புலியை உடுக்கும் புணிதத் திருவே புதிர்வடிவே
மலையின் மகள்க்கு மணமே மறையே மதிநுதலுள்
உலையின் நெருப்பை உருக்கும் விரிவே உலகமெனும்
கலக நிலத்தைக் கடத்தும் கணிப்பே கடவுள்நீயே!

சூலம் விடுக்கும் சுடர்க்கர நாயக! சுந்தரியை
மேலில் புனைந்திடும் மேன்மிகு நாயக மேதினியோர்
காலைப் பிடிக்கக் கடுகி யவர்க்கே கருணைமழைச்
சாலம் கொடுக்கும் சிவமகா ராஜனின் சந்நதியே!

ஆடி இருக்கும் அனலே அமரர் அடைதுயரைச்
சாடி முடிக்கச் சமர்செய பாலனைத் தந்தவனே!
மூடி இருக்கும் நுதல்விழி தீச்சுடர் நூதனமே
பாடி இருக்கும் படியெனும் பக்தரைப் பார்த்தருளே!!

-விவேக்பாரதி
14.02.2018

Comments

Popular Posts