வையத் தலைமை கொள்

 வையகத்தில் வாழ்கின்ற உயிர்களுளே
   மனிதயினம் வலிமை பெற்று
மெய்யகத்தில் கொண்டதுவாய் வளர்ந்தோங்கிப்
   பின்னாளில் மேன்மை குன்றிப்
பொய்யகத்தைச் சுமக்கின்ற புரட்டுடனே
   வாழும்நிலை புகுந்த தாலே
உய்வகத்தைச் சரியாக்க வையத்தின்
   தலைமைகொள் உயரி ளைஞா!
 
நீயின்றி உயிரில்லை எவ்வுயிரும்
   நீயென்றே நிறுத்தும் வேதம்!
தீயின்றி நீரின்றி வானின்றி
   நிலமின்றி திசைகள் எட்டும்
பாய்கின்ற காற்றின்றி புவியேது?
   நீயந்தப் பஞ்ச பூதம்!
காய்கின்ற மனம்வேண்டா! வையத்தின்
   தலைமைகொள் கடமை ஆற்று!
 
உன்தேசம் உன்மக்கள் உன்சொந்தம்
   உன்சுற்றம் உனது பூமி
உன்கடமை என்கின்ற உணர்வுற்ற
   மறுகணமே உணர்த்தும் சிந்தை
மின்வெட்டு போல்பாய்ந்து நெஞ்சுக்குள்
   உயர்கின்ற மேன்மை நல்கும்!
நின்பாத நிழல்காண ஏங்குகிற
   பூமிக்கு நீம ருந்து!
 
ஊருக்கு நலன்செய்யும் உள்ளத்தைத்
   தலையென்றே உலகம் போற்றும்!
யாருக்கும் பரிவாகும் எண்ணத்தைத்
   தலைமையென யாண்டும் ஏற்றும்!
வீரத்தில் மட்டுமன்றி விரைவாகச்
   சிந்திக்கும் விவேகம் தன்னில்
நேருக்கு நேர்நிற்கும் தோற்றத்தைத்
   தலைமையென நிலமும் ஏற்கும்!
 
அத்தலைமை நீகொள்ள அன்பிற்கும்
   ஆளுமைக்கும் அகத்தை வைப்பாய்!
எத்தகைய நிலைவரினும் வழுவாத
   குணம்தன்னை எடுத்து டுப்பாய்!
வித்தகமும் வீரியமும் தலைமைக்குச்
   சான்றாகும்! வெற்றி உன்றன்
சக்திக்குள் வந்தடையும்! தெய்வத்தால்
   வையத்தின் தலைமை கொள்வாய்!!
 
-விவேக்பாரதி
15.02.2018 

Comments

Popular Posts