இன்றே தேன்

இன்றே இன்றைச் சுவைத்துவிட் டாலினி
   இதயம் கனக்காது!
நன்றாய் இன்றைச் சுகித்துவிட் டாலதில்
   நாளைய கதையேது?
கன்றாய்த் துள்ளிடக் கருதிவிட் டால்நமைக்
   காலம் தடுக்காது!
அன்றே அன்றை அடைத்துவைப் போமெனின்
   அதிர்வு பிறக்காது!

மறுமுறை வருமழை எனவொரு சிப்பியும்
   வாய்தனை மூடாது!
பெறுகிற சிறுதுளி வரவதைப் பயனுற
   பெருமையின் முத்தாக்கும்!
உறுகிற பொழுதினை நாமிது போல்நம
   துள்ளச் சிப்பியிலே
சிறப்புடன் ஏந்துதல் இன்றை ருசித்தலச்
   சிலிர்ப்புகள் அனுபவங்கள்!

பூவும் ஒருமுறை புயலும் ஒருமுறை
   புதிர்விடை ஒருமுறையே
யாவும் ஒருமுறை நிகழ்வது நாமதை
   அழகாய் அனுபவித்து
மேவும் வழக்கினை கைபிடிப் போமெனில்
   மெலிவே தோன்றாது!
தாவித் தத்தும் மனத்திற் குள்ளும்
   தர்க்கம் பிறக்காது!

அடுத்த முறையொன் றடைய விரும்பிடில்,
   ஆசை பிறக்கிறது!
எடுக்கும் ஆசை எப்படி எல்லாம்
   இருக்கப் பணிக்கிறது!
முடிந்ததை உணரா மறுபடி வேண்டுதல்
   முட்டாள்த் தனமாகும்!
அடுப்பினுள் சென்றபின் காகித மென்ன
   அப்படி யேவாவரும்?

போனது வாரா! வருவது நிற்கா!
   போட்டிகள் வாழ்க்கையலை!
வீணென மீண்டும் அந்நிலை வேண்டல்
    விசனம் ஆக்கும்உலை
ஆனவ ரைக்கும் முழுதாய் அன்றை
   அனுபவிக்க வேண்டும்!
தேனை எடுக்கும் வண்டினுக் கென்ன
   திகட்டவா செய்யும்??

அன்பிற்குரிய அனு (Anuradha Venkateswaran) அம்மாவுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்

-விவேக்பாரதி
12.02.2018

Comments

Popular Posts