ஆதிசிவா


(பாரதியாரின்  "நாட்டினில் எங்கும் சுதந்திர வாஞ்சையை" என்ற கவிதையின் சந்தம்)

பொற்சடை மின்னிட வெள்ளி நிலாவினைப்
   பூட்டினாய் - ஒளி - காட்டினாய்!
அற்புத கங்கையைக் கூந்தலில் கட்டிநீ
   ஆடினாய் - இசை - பாடினாய்!
தற்பெரு மைசொல்ல தாக்கு மரவத்தைத்
   தாங்கினாய் - நிலை - ஓங்கினாய்
கற்புக் கரசியை காயத்தின் பாதியில்
   கட்டினாய் - வான் - முட்டினாய்!

வெள்ள மடைத்திட வேந்தன் பிரம்படி
   வாங்கினாய் - வலி - தாங்கினாய்!
பள்ளை இசைத்திட நால்வரின் நெஞ்சிலும்
   பாவினாய் - சுகம் - மேவினாய்!
நள்ளிருள் வேளையில் நர்த்தனத் தாண்டவம்
   நாடினார் - மனத் - தாடினாய்!
பிள்ளை முருகனைத் தோற்ற நுதழ்விழி
   பீய்ச்சினாய் - சுடர் - பாய்ச்சினாய்!

காலுதை வில்லடி காரிகை தொட்டிலும்
   கண்டனை - அருள் - கொண்டனை
நூலுடை செந்தமிழ் நூதனம் யாவையும்
   நோக்கினாய் - சபை - ஆக்கினாய்!
தோலுடை யாய்ப்புலி மேலுடை ஏந்திடத்
   தோன்றினாய் - மனம் - ஊன்றினாய்!
ஆல விஷத்தினை ஏந்திக் குடித்தவா
   ஆறினாய் - புகழ் - ஏறினாய்!

ஆதிசி வாவெனக் கூப்பிடும் நெஞ்சினுக்
   கன்பினாய் - தனி - தெம்பினாய்!
வேத முழங்கமும் பாடல் புழக்கமுன்
   வேண்டுவாய் - அருள் - தூண்டுவாய்
தீதை அழித்திடும் தீர னுயர்புகழ்
   செப்பினோம் - அதற் - கொப்பினோம்
வாதை அடங்க வழிவகை செய்தெமை
   வாழ்த்துவாய் - பகை - தாழ்த்துவாய்!!

-விவேக்பாரதி
13.02.2018

Comments

Popular Posts