சக்தியின் சொல்

திசையெலாம் விரியும் வானாய்த்,
   திகிரியாய், அங்கே சுற்றி
அசைவுறுங் கோளா, யண்டத்
   ததிசய உண்மை தாமாய்,
விசையுற விந்தால் தோன்றும்
   விசித்திர உயிர ணுக்கள்,
இசையுடன் ஓடும் ரத்தம்,
   இருதயம், தேகம், உள்ளம்,

யாவினும் நீவ சிக்கும்
   இடமென மறையோர் கூட்டம்
கூவிடக் கேட்டி ருந்தும்
   குறையற என்னுள் உன்னை
நீவிடும் சக்தி தன்னை
   நிஜத்தினைக் காணா துற்றேன்!
கேவியே அழுத லுற்றேன்
   கேட்கவும் மறந்து போனேன்!

அப்பொழு தென்னை அண்டி
   ஆகுமவ் விந்தை சொல்லி
இப்பிறப் பெடுத்த சேதி
   இயம்பியென் உள்ளம் தன்னில்
ஒப்பிலா திருக்கும் உன்றன்
   ஒளியிலுன் விலாசம் காட்டிச்
செப்பிடத் தமிழ்கொ டுத்துகச்
   செகத்தினைப் பாடச் சொன்னாய்!

மலர்மிசை இமயம் வைத்தல்,
   மலையற எலிவி டுத்தல்,
சிலைசெய ஆணி தன்னைச்
   செப்புதல், போலே நின்றன்
நிலைபெறு ஜோதி ஆற்றல்
   நிறைவினை ஏற்க ஏற்க
அலையுடன் நிரம்பு கின்ற
   அருளுறும் கோப்பை யானேன்!

உண்டது சொற்பம்! கீழே
   உதிர்ந்தது சொற்பம்! எல்லாம்
கொண்டிடக் கொளும்மு யற்சிக்
   குறிப்புகள் அதிகம்! வாக்காய்
விண்டவை கொஞ்சம்! சொல்லா
   விழுங்கிய உண்மை கொஞ்சம்
எண்ணவெள் ளத்தில் நீந்தி
   இருபது மட்டும் உண்மை!

உருவினைக் காட்டி என்னை
   உயிர்பெறச் செய்த காளி
கருத்தினைத் தெளிவு செய்யக்
   கருதிடும் பாலன் செய்கை
விருப்பமோ வெறுப்போ காத்தால்
   விரைவினில் தேறி நின்றன்
திருப்பதம் சேர்ந்து மீண்டும்
   திரும்பிடா வரத்தைக் கொள்வேன்!

அதுவரை பிறந்த மண்ணை
   ஆயிரம் தரம்வ ணங்கி
மதுவெனக் கவிதை பாடி
   மகிழ்த்திட வரந்தா காளி!
குதலையின் மொழியை இந்தக்
   குவலயம் கேட்கச் செய்வாய்
அதனிடை வருவ தெல்லாம்
   அம்பிகே நின்சொல் அன்றோ!!

-விவேக்பாரதி
05.02.2018

Comments

Popular Posts