ஒருமுகப்படு மனமே
உனக்கே உதவுமது
தெருமுகத்(து) அலையாமல் - தெளிவுத்
தேரை அருளுமது!
தெருமுகத்(து) அலையாமல் - தெளிவுத்
தேரை அருளுமது!
கிளைக்குக் கிளைதாவி - உனக்குக்
கிடைக்கும் சுகம்,எனிலும்
விளையும் வலியதிகம் - ஓய்வு
வேண்டும் அதையுணர்வாய்!
அடங்கி இருப்பதுபோல் - பெரிய
ஆற்றல் எதுவுமில்லை!
மடங்கி இருப்பதனால் - கத்தி
மழுங்கப் போவதில்லை!
ஒருமுகப்படு மனமே!
வானே அளந்தாலும் - சிறகு
வலித்தால் தரைவரணும்!
தேனே கிடைத்தாலும் - அதுவும்
திகட்டும் காலம்வரும்!
பதுங்கல் புலிக்கழகு - மரத்தின்
படைப்போ சிறுவிதைதான்
ஒதுங்கும் மணல்துகள்கள் - நாளை
உயரும் மலைச்சிகரம்!
ஒருமுகப்படு மனமே!
கவலைக் கடல்விழுந்தால் - பதறிக்
கைகால் அடிக்காதே
அவநம்பிக்கைக்குள் - அதுவே
அழுத்திக் கொண்டுவிடும்!
மூச்சை மெதுவாக்கு, - சிந்தி,
மூளை தெளிவாக்கு
நீச்சல் தேவையில்லை - மனமே
நீயாய் மேலெழுவாய்!
ஒருமுகப்படு மனமே!
அடுத்தவர் செய்கையினால் - உனக்குள்
அதிர்ச்சி பிறக்காது
படுத்ததும் தூக்கம்வரும் - உன்றன்
பார்வையில் மாற்றம்வரும்!
உன்னிலை உணர்ந்திடலாம் - எல்லா
உணர்வும் புதுமைபெறும்
தன்னிலைத் தெளிவுவரும் - அனைத்தும்
தியானம் வழங்கிவிடும்!!
ஒருமுகப்படு மனமே!
-விவேக்பாரதி
27 டிசம்பர் 2022
தியான நாள் 3
Comments
Post a Comment