நெல்லுக்கிரைத்த நீர் | மார்கழிக் கோலம்


ஆதியந்தம் அற்றஜோதி அண்டமே அளந்தமேனி 
   அற்பனென்றன் நெஞ்சொடுங்கி நின்றதென்னவோ - வந்து 
பாதிதோன்றி பின்மறைந்து நாளெலாமும் தேடவிட்டுப் 
   பார்த்திருந்து புன்னகைக்கும் லீலை என்னவோ? 

தீதுநன்று செய்யுமையன் திசையையே அணிந்தமெய்யன்
   சிற்றெறும்பின் மீதுவெல்லம் வைத்த தென்னவோ - அதை
மோதிமோதித் தின்னப்பார்த்து முற்றிலும் சலித்தபோதும்
   முந்திவந்து காத்திடாத தொந்தம் என்னவோ?

சூலமேந்தி நின்றகையன் சுடரையே திணித்தகண்ணன்
   சூழுமென்றன் பாவமூட்டை வந்தெரிப்பனோ? - இல்லைக் 
காலமென்னைப் பந்தடிக்கும் நேரமட்டும் காத்திருந்து
   காலில்வீழ்ந்து தொட்டபின்னர் கைகொடுப்பனோ?

ஆலமேந்தும் நீலகண்டன் ஆடியே கிடக்குமுண்டன்
   அறிவிலாத பித்தனென்னைக் ஏங்க வைப்பனோ? - கண்ணில் 
தூலமாகி சூட்சுமத்தின் மூலமாகி மாயம்செய்து 
   துணைக்கிருந்தும் தூரநின்று நோகடிப்பனோ?

காளையேறு கின்றமன்னன் காற்றிலே பறந்துவந்து
   கவலையேறு மென்னைச்சற்றுக் கனிய வைப்பனோ - என்றும் 
நாளையே நினைத்துநொந்து நாளெலாம் உழைத்துவெந்து 
   நானொதுங்கும் நீழல்பார்த்து காத்து நிற்பனோ!

தாகமாய் அலைந்தலைந்து யூகமாய் நடந்தளந்து 
   சார்ந்திடும் குளக்கரைக்கு காவல் செய்வனோ - இல்லை 
மேகமாய் மிதந்துவந்து நீரினிலே நனைத்துவிட்டு
   மேலுமென் றழைக்கும்போது தீர்ந்திருப்பனோ

கேள்வியான நெஞ்சகத்தை வேள்வித்தீயிலே உருக்கி
   கேட்டவண்ணம் கேட்டதை நடத்தி வைப்பனோ - வினைத்
தேள்விடம் பதிந்தகள்வன் போலநானும் வாய்புதைக்கும் 
   தேதிபார்த்து நோவுதீர தேன் கொடுப்பனோ??

ஆசையாவும் உள்ளொலிக்க ஓசையோடு கவிபிறக்க 
   ஆதிசித்தன் மீளும்நாளைப் பார்த்திருக்கிறேன்! - இங்கு
பூசையே நமக்குப்பாடல் புண்ணியம் நமக்குவேலை
   பூழ்திபட்ட தோளுலுக்கி வேலை செய்கிறேன்! - நீர் 
புல்லில்பாயும் நாளுக்காக நெல் வளர்க்கிறேன்!! 

-விவேக்பாரதி
17 டிசம்பர் 2022

Comments

Popular Posts