நான் பிரபஞ்சம்


என் உடலின் 
ஒரு சிறு பகுதி
வண்ணத்துப் பூச்சியாய்ப்
பூக்கள் தோறும்
தேன் தேடி துழாவுகிறது!
அது விடுவித்த புழுக்கூடு
மக்கத் தொடங்கியது! 

என் கால்கள் நதியாகி
காடுகளின் கால்களை
நனைத்து நிறைகிறது!
அதன் முதன்மூலம் இன்னும்
சிற்றோடையே! 

என் வியப்புகள் மலைகளாய்
மார்பு புடைத்த ஆயாசத்தில்
வாய்ப்பு மேகங்களின் 
கனம் சுமந்து 
அனுபவ மழை வேண்டித்
தவம் கிடக்கிறது!
அதன் அடிவாரத்திலும்
வெற்றி எலிகளின் பொத்தல்கள்! 

இன்று காலை வீழ்ந்த
ஒரு சொட்டு மழையில் மலர்ந்த 
பூவோடே 
என் விழித்திரை அவிழ்ந்த 
சத்தம் கேட்டது!
உயிர் இன்னும் துயிலில்
மழைச்சந்தம் ரசிக்கிறது! 

என் சோம்பல்
உங்கள் தெரு முழுக்க
மண் புணர்ந்த குளிராய்ப்
பிரிய மறுத்துப்
போர்வை மூடிப் படுக்கிறது!
நினைவுச் சுடரின் வெளிச்சம்
தொடுமிடம் மட்டும் பிரகாசம்! 

உலகம் தன்னொரு சுற்றை
நேற்றே முடித்துத் திருப்பி
இன்றொரு சுற்றுக்காய்ப்
புலர்கிறது!
நான்மட்டும் அசைவற்றிருக்கிறேன்
என்னைத் தவிர பிற பஞ்சம் தீண்டாத
பிரபஞ்சமாய்!! 

-விவேக்பாரதி
25 டிசம்பர் 2022

Comments

Popular Posts