கோபதவம்


சின்னச்
 சின்னக் கோபம் என்னைச்
    சீவிச் சீவிப் பார்க்கையிலே
இன்னும் இன்னும் குளுமை சேர்க்கும்
    இளநீராகும் வரம்வேண்டும்

மூச்சு முட்டும் கோபம் என்மேல் 
    முன்பின் அம்பு வீசுகையில்
நீர்ச்சுழல்போல் அனைத்தும் கொண்டு 
    நிறைவில் எஞ்சும் குணம்வேண்டும்!

நரம்பை இடிக்கும் கோபம் என்மேல்
    நர்த்தனங்கள் செய்கையிலே
துரும்பைப் போலச் சாய்ந்துமீண்டும்
    தோளை நிமிர்த்தும் வலுவேண்டும்!

கண்கள் சிவக்கச் செய்யும் கோபம் 
    கவ்விப் பிடிக்கும் வேளையிலே
மண்போல் பொறுத்து என்கோபத்தை 
    வைரம் ஆக்கும் திறம்வேண்டும்!

என்னை மறக்கச் செய்யும் கோபம் 
    எரியைப் போலத் தணல்கையிலே
பொன்னைப் போல அதிலும் ஒளிர்ந்து 
    பொலிவை அடையும் மறம்வேண்டும்!

தலையைச் சுக்கு நூறாக்குகிற
    தாளாக் கோபம் சேருங்கால்
இலையைப் போலே தூள்தூள் ஆகி 
    உரமாய் மாறும் நிலைவேண்டும்

கோபம் என்னும் எதிரி என்னைக் 
    கொல்லும் நிலையே நேர்ந்தாலும்
தாபம்பாவம் எல்லாம் தீர்ந்து
    தண்ணீர் போல விழவேண்டும் -அன்றென் 
    தவமும் முடிந்து விடவேண்டும்!!

-விவேக்பாரதி
05-12-2022

Comments

Popular Posts