விழி நாணும்! நானும்!


பால்நிலா பூமிக்கு வருவதுண்டோ?
   படியிலே கீழமர்ந்து முகமாம் சோதி 
மேல்படும் கருங்கூந்தல் முகில் விலக்கி
   முறுவலை மின்னல்போல் கொஞ்சம் காட்டி
வாள்களாம் இருவிழியை இமையால் மூடி
   வளர்ந்திடும் நாணத்தில் ஜொலித்துக் கொண்டே
கால்களால் நடப்பவர்கள் பறந்து சென்று
   கார்முகில் கூட்டத்தை உரசும் வண்ணம்!

பால்நிலா பூமிக்கு வருவதுண்டோ?

மல்லிகை படிமீது பூப்பதுண்டோ?
   வண்ணமோ வெண்மைதான் என்ற போதும் 
துள்ளிடும் பலவண்ணப் பூச்சிக் கண்கள்
   சட்டெனக் கண்டவுடன் கிறங்கி வீழ,
சொல்லினில் அடங்கிடாத காதல் வாசம்
   தோன்றிடும் நாணத்தால் தெரிந்திருக்க 
கொல்லவே மலரென்ற வடிவம் பூண்டு 
   கூற்றுவன் காதலுடன் வருவதைப்போல்! 

மல்லிகை படிமீது பூப்பதுண்டோ

காவியம் கண்தாழ்த்தி நகைப்பதுண்டா?
   கண்டதும் உயிர்கிள்ளி தன்னைத் தைத்து
ஓவியம் போல்நெஞ்சில் பதிந்து கொண்டு
   ஒவ்வொரு சிலிப்புக்கும் உணர்வு தந்து
பாவலர் காணாத கற்பனைகள்
   பண்ணிநான் காற்றாகி மேனி தீண்டி 
தேவரின் உலகத்தைத் தொட்டுப் பார்த்த 
   தெம்புடன் கனவோடே வாழ்ந்திருக்க! 

காவியம் கண்தாழ்த்தி நகைப்பதுண்டா?

கண்ணிலே ஒளிபோல, சொல்லும் இந்தக்
  கவிதையின் வலிபோல எப்போதெனும்
உண்மையாய்த் தோன்றிடுவாள் வந்து விட்டால்
   ஊமையாய் ஆவதைப்போல் சுகந்தான் உண்டோ? 
எண்ணினால் விரிகின்ற வானம் ஆக
   ஏறினால் நிறையாத வாழ்க்கை ஆக 
பெண்மகள் விழிநாணைப் படம் பிடித்தாள்
   பெரியவிற் கணைபாயச் செத்தேன் மீண்டேன்!!

-விவேக்பாரதி
18 டிசம்பர் 2022

Comments

Popular Posts