கண்ணனே ஆதாரம் | மார்கழிக் கோலம்


கண்ணனை எண்ணிடும் காட்சிகளில் - ஒரு
    கவிஞனின் தோற்றம் விரிகிறது
எண்ணமல்லாமல் ஏது மனம் - என 
    எங்கிருந்தோ குரல் கேட்கிறது!
புன்னகை தவழும் அன்புமுகம் - ஒரு 
    பூவிதழாகத் திறக்கிறது!
மன்னவன் வந்தெனைத் தீண்டுகையில் - என் 
    மந்திர வானம் விரிகிறது!

இசையும் கவியும் அவன்தரவே - மனம் 
    இயங்கும் குழலாய்த் திரிகிறது!
பசைபோல் அவன்சொல் கேட்கையிலே - உயிர்
    பானை வெண்ணெய் ஆகிறது!
அசைந்தால் பின்னல் அசைந்திடவும் - அவன்
    அரசாணைக்கே நடந்திடவும்
தசையும் நரம்பும் நினைக்கிறது - உடல் 
    சட்டெனக் கோபியர் ஆகிறது!

ராதை ஆக நினைக்கிறது - அதற்கு
    ராவும் பகலும் குதிக்கிறது!
கீதை போலொரு சொல்லேனும் - செவி
    கேட்காதா எனத் தவிக்கிறது!
பாதை காட்டிப் போம்நிழலில் - என் 
    பாரதம் முழுதும் விரிகிறது!
மீதம் இன்றிக் கரையேனோ - என 
    விரும்பி உள்ளம் சிரிக்கிறது!

மானிடர் எல்லாம் அவன்பின்னால் - மறை 
    வாசகம் எல்லாம் அவன்சொல்லில்
ஆநிரை எல்லாம் அவன்அன்பில் - இந்த 
    அண்டம் முழுதும் அவன்வாயில்!  
ஞானியர் எல்லாம் காதலுடன் - இள
    நங்கையர் எல்லாம் ஆசையுடன்!
தேனிசை எல்லாம் அவன்குரலில் - குரு, 
    தெய்வம் கலப்பதும் அவன்வடிவில்!

தினமும் கண்ணனைப் பார்க்கின்றேன் - அவன் 
    திருவாய் மொழிகளைக் கேட்கின்றேன்! 
மனதில் அவனை விதைகிண்றேன் - அவன் 
    மகிமைகள் கூறி குதிக்கின்றேன்!
கனவும் நனவும் கலக்கையிலே - அவன் 
    கதகதப்பில் நான் கரைகின்றேன்
அனைத்தும் அறிவான் அவனென்னும் - பொருள் 
    ஆதாரத்தால் உயிர்க்கின்றேன்!!

-விவேக்பாரதி
16 டிசம்பர் 2022 | இசைக்கவி ரமணனுக்காக!

Comments

Popular Posts