நானும் உனதே


சுவாமி விவேகானந்தரின் “கடவுளுக்கான தேடல்” என்ற ஆங்கிலக் கவிதையை ஒரு கட்டுரைக்காக தமிழில் மொழி பெயர்க்க நேர்ந்தது... அதுதான் இது! 


குன்றில் வெளியில் மலையின் தொடரில்
கோயில் ஆலயம் மசூதியில்,
குர்-ஆன் பைபிள் வேத வரிகளில்
குறியாய் உன்னைத் தேடிநின்றேன்!
என்றோ காட்டில் தொலைந்த கன்றாய்
ஏக்கத் தோடே நானழுதேன்!
எங்கே சென்றாய்? என்றேன் அன்பே!
எதிரொலிசென்றேன்என்றிடவே!
 
ஆண்டுகள் நாட்கள் இரவுகள் கழிய
அறிவில் சிறுபொறி கனன்றது!
அல்லும் பகலும் நிறம் மாறுகையில்
இதயம் இரண்டாய்ப் பிளந்தது!
தாண்டும் காலம் வானிலை திறந்து
தண்ணீர்க் கங்கைக் கரைநின்றேன்
தூசின் நடுவே எரியும் கண்ணீர் 
நீர் ஓசையுடன் நானழுதேன்!
 
கருணையின் பக்கம் எனக்குக் காட்டுக
கதியடைந் தோரின் வழியில்‘ என
கடவுள் பெயர்கள் சொல்லித் துதித்தேன் 
காலச் சாத்திரம் கடைபிடித்தேன்!
உருகிய நீருடன் ஆண்டுகள் கரைய
ஒவ்வொரு கணமும் யுகமாக,
உறுதுயர் நடுவில் என்றனை ஆஹா 
உயர அழைத்தது குரலொன்று 

இதமாய் எழுந்த அந்தக் குரலெனை
மகனே மகனே என்றழைத்து,
ஒரே தொணியுடன் ஒரே இசையுடன்
இதய வீணையை மீட்டியது!
பதம் தடுமாறி எழுந்து வியந்து
பேச்சு வரும்வழி கண்டறிய 
பார்த்தேன் மேலும் கீழும் புறமும் 
பின்னும் முன்னும் தலையசைத்தேன்

மறுபடி மறுபடி வந்தது குரலொலி
மடுக்கும் செவியில் தெய்வசுகம்!
ஆவியின் உள்ளே அமைதியாக
நுழைந்து கவர்ந்தது பரம இதம்!
சிறுதுளி மின்னல் ஆவியை ஒளிர்க்க 
இதயத்(து) இதயம் விரிந்தது!
ன்பம் பரவசம் எதைநான் கண்டேன்!
அன்பே இறைவா இங்கேநீ!
 
என் எல்லாம் ஆனாய் இங்கே நீ!

உன்னைத் தானே தேடித் திரிந்தேன்
புறவெளி எங்கும் நீ இருந்தாய்!
நான் அலைகின்ற வெளியினில் எல்லாம்
ராஜாங்கத்தில் அமர்ந்திருந்தாய்!
குன்றில் வெளியில் மலைத்தொடர்களில்
தூரம் உயரம் நீ ஆனாய்!
என்றன் அருகே கொஞ்சம் உணர்ந்தேன்,
என்வழி யாவும் நீ ஆனாய்!
 
நிலவின் கதிரில் விண்மீன் ஒளியில்
நாட்கள் காட்டும் அதிசயத்தில்
ஜொலிப்பது நீயே அதன் அழகுகளில்
பிம்பமாவதும் நீயேதான்!
கம்பீரக் காலை கரையும் மாலை
காற்று நிரம்பிய கடற்பரப்பு
இயற்கையின் அழகில் பறவைகள் ஒலியில்
இழைந்திருப்பதும் நீயேதான்!
 
இறுக்கும் இடர்கள் எனை வீழ்த்துகையில்
இதயம் பலத்தை இழக்கிறது!
இருக்கும் விதிகள் அனைத்தும் நெருக்க
இயற்கை என்னை நொறுக்கியது!
இருந்த போதும் உன் இன்குரல் காதில்
இருக்கின்றேன் உனக்(கு) அருகிலென
இதயம் உன்னால் வலுவுறும் அன்பே
இழப்பு நூறிலும் பயமில்லை!
 
 
தாயின் இடத்தில் பேசுவதும் நீ!
மழலைக் கண்ணின் மடிப்பில் நீ!
சாலைச் சிறுவர் விளையாட்டுகளில்
பார்த்தால் அங்கே நிற்பது நீ!
புனித நட்புகள் கை குலுக்கிடப்
புணரும் பொழுதில் தெரிவது நீ!
தாய் முத்தத்தில் அமிழ்தை ஊட்டித்
தளிரின்அம்மாஎனும்சொல் நீ!
 
குருமார் சொல்லும் கடவுளும் நீதான்
சாத்திரம் யாவும் தந்தது நீ!
வேதம் பைபிள் குர்-ஆன் எல்லாம்
முழங்கும் அமைதி மந்திரம் நீ!
நீ தான் நீ தான் உயிர்களின் உயிரே!
உலக வாழ்க்கையின் ஓட்டத்தில்!
ஓம் தத் சத் ஓம்! நீயே கடவுள்
அன்பே நானும் உனதேதான்!!

விவேக்பாரதி
2018


Comments

Popular Posts