ஆறும் கடலும் ராமனும்




ஷோபனா ரவி முகநூலில் பதிவிட்டிருந்த கவிதை ஒன்று, என்னை சரயு நதிக்கரையில் கொண்டு நிறுத்தியது... பாருங்கள்! 

ஆழ்ந்த மௌனத்திலே - தனியோர் 
ஆற்றங் கரைநிழலில் 
வாழ்ந்திருந்தேன் ராமா - கண்முன்னே 
வண்ணப் படகுதந்தாய் 

ஏற்றிவிட்டாய் ராமா - நீயே 
ஏறித் துடுப்புமிட்டாய் 
மாற்றுரை ஏதுமின்றி - நதியின் 
மடியில் தவழ்ந்துசென்றோம் 

பிறவிக் கடல்பெரிது - அதிலே 
பிழைக்கும் வழியரிது 
அறிவித்தனை ராமா - நானும் 
ஆம்மட்டும் போட்டுநின்றேன்

ஆறு கடல்நெருங்க - நதியின் 
ஆற்றல் பெருகிவிட 
ஆறுதல் சொல்லிவைத்தாய் - பிறகு 
அருகிலுனைக் காணோம் 

கடலை அடைந்துவிட்டேன் - அடடா 
கைகளில் என்துடுப்பு
உடலை உளமியக்கும் - அதுபோல் 
ஊமை அலையியக்க 

நாட்கணக்காய் கடலில் - உன்னை 
நாடியே செல்லுகிறேன்! 
கேட்கிறதா ராமா - எனது 
கின்னர நெஞ்சுமொழி?

இரவிலெல்லாம் பாடல் - பகலில் 
இயல்புடனே தேடல் 
உறவில்லெல்லாம் ஊடல் - உனைநான் 
ஒருதரம் பார்க்கணுமே 

கண்முன் வருவதற்கேன் - நீ 
காலம் கடத்துகிறாய்?
உண்மை அறியக்கொடு - ராமா 
உடைமை எடுத்துக்கொள்ளு

படகினை நீயிக்கும் - வரையில் 
பயமிலை நெஞ்சினிலே 
துடுப்பு கைக்குவர - கணமும் 
துடிப்பதேன் பேரரசே 

கடலின் அலைகளெல்லாம் - பெரிதாய் 
காட்சி விரிகிறது 
உடனே தொடரும்பயம் - அதிலே 
உறுதி சரிகிறது!

சீற்றம் அமைதிவரும் - கடலில் 
சிக்கி நகருகிறேன், 
ஆற்றங் கரையிலுனை - அடியேன் 
அடுத்து காண்பதெப்போ??

-விவேக்பாரதி
23-10-2021 

Comments

Post a Comment

Popular Posts