5. கனவு நனவு | நவராத்திரி 2021


- ஒலி வடிவில் கேட்க படத்தத்தைத் தொடவும்- 

இன்று மாலை மயிலாப்பூரில் இசைக்கவி ரமணன் ஐயா உரையாற்றிய  ‘மாதம்தோறும் மகாகவி’ நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். இது கொரோனா ஊரடங்குக்குப் பின் கலந்துகொள்ளும் முதல் நேரடி நிகழ்ச்சி. நான் சென்ற நேரமோ என்னவோ, பாரதியை எழுத வைத்தது எது என்பதுதான் உரையின் தலைப்பாக இருந்தது. உரை நடந்த ஒரு மணி நேரம் 4 நிமிடங்களையும் உள்ளத்துக்குள் பொத்திப் பொத்தி ரசித்தேன். என்னைக் கண்ட மகிழ்ச்சியில் உரையின் நடுவே ஐயாவும் இரண்டு மூன்றுமுறை என்னைக் குறிப்பிட்டார். அதில் ஒருமுறை “கனவுக்கும் நனவுக்கும் நடுவினிலே ஒரு கள்ளத் தாழ்வாரம்” என்றொரு வரியை அப்படியே உதிர்த்துவிட்டு, மீதத்தை விவேக்பாரதி நிரப்புவான் என்று சொல்லிவைத்தார். 

நவராத்திரிக்கு பராசக்தி வெவ்வேறு வடிவங்களில் எனக்கு முதல் சொல் கொடுத்துக்கொண்டே இருப்பாள். இன்று இசைக்கவி வாயால் அவள் சொன்னதும் உள்ளே ஆலை வேலையைத் தொடங்கிற்று. வேலையெல்லாம் முடித்து கணினியைத் தொட்டதும் விரிந்திருக்கது இதோ- 

கனவுக்கும் நனவுக்கும் நடுவினிலே ஒரு 
கள்ளத் தாழ்வாரம் - அது
காளியை நேரினில் கண்டு ரசித்திடும் 
கவிதைக்(கு) ஆதாரம்! 
மனமொரு படகென அதிலொரு சுடரென 
மகமாயி தெரிவாள் - எனை 
மாபெரும் கைகளில் கோபுரம் ஏற்றியே 
மாலைகளை எரிவாள் 

ஒருமுறை வந்தவள் தொட்டுவிட்டாலே 
உள்ளம் கிடையாது - பின் 
ஒருமுறை இன்னும் ஒருமுறை எனத்தினம்
ஓடுதல் முடியாது! 
வரிகளும் கவிதையும் மெட்டுகளும் அவள் 
வளர்க்கும் தாலாட்டு - என் 
வாழ்க்கை என்பதும் பார்வதி தேவியின்
வளைக்கை விளையாட்டு!

இன்பத்தைப் பாடுக என்பாள் உடனே 
இடியை மேல்விடுவாள் - அதில் 
இடிந்தவனைப் பின் தூக்கிக் கொஞ்சம் 
இதமாய் நீவிடுவாள் 
துன்பத்தைப் பாடுக என்பாள் என்னைத் 
துள்ளச் செய்திடுவாள் - தினம் 
தொட்டுப் பிடித்திட முன்னால் வருபவள் 
தொடுவான் ஆகிடுவாள்!

தினந்தினம் அலையும் ஓட்டத்திலே பல 
திருப்பம் கொடுப்பதவள் - எது 
திருப்தியென்றால் அதைக் காணாமல் தினம்
திணற விடுப்பதவள் 
தனித்தனி பாத்திரம் ஆயினும் மானுடம் 
சர்வம் அர்ப்பணமாம் - அதைச்
சாற்றும் வகையினில் சன்னிதி நடுவினில் 
தாயின் பூப்பதமாம்

ஏதோ நினைத்தெனை விட்டுவிட்டாள் அதை 
என்றாவது சொல்வாள் - அது 
எழுத்தால் என்பதை நானறிந்தேன் அவள் 
இன்னும் அருகணைந்தாள் 
தூதோ மடலோ வரும்வரைக்கும் என் 
தூரம் தொடர்ந்திருக்கும் - அதில் 
துவளல் எதுவும் நெருங்காமல், அத் 
துர்கை துணையிருப்பாள்!! 

-விவேக்பாரதி
11-10-2021



 

Comments

Popular Posts