1.காளிக்கு அடிமை | நவராத்திரி 2021
நானாக பாடவில்லை, நாவுக் குள்ளே
நல்லதொரு ராஜாங்கம் உமைசெய் கின்றாள்
வாணாளை அவள்போக்கில் நடத்து தல்போல்
வார்த்தைகளைத் தன்னாலே நடத்து கின்றாள்
ஆனாலும் புகழ்ச்சிஎனை மேவ விட்டு
ஆங்காரம் அடையவிட்டுப் பின் ஒடித்து
ஆனான கூத்தெல்லாம் நடிப்பாள் இந்த
அடிமைக்குப் பணியேற்றுக் கிடத்தல் ஒன்றே!
சுட்டெரிக்கும் பரிதியொளி இரவிற் சேர்ப்பாள்
சுந்தரத்தண் நிலவையென் பகலிற் சேர்ப்பாள்
மொட்டவிழும் மலர்மாலை தோளில் சூடி
மொய்ம்புறவே விளையாடி கானம் பாடி
ஒட்டுறவாய் நின்றிருப்பாள் சிலநே ரத்தில்
ஒதுங்கிடுவாள் உயிர்த்துன்பம் பெரிதி ழைப்பாள்
எட்டுணையும் பிரியாதாள் நடித்தி ருப்பாள்
ஏங்கிக் கழல்சேர்ந்து கெஞ்சித் தீர்பேன்!
மாற்றங்கள் இல்லாத பாதை கேட்பேன்
மரித்துப்பின் பிறவென்பாள் மாற்றம் கேட்பின்
ஆற்றல்கள் கொடுத்தென்னைப் பாட வைப்பாள்
அண்டங்கள் துண்டங்கள் காண வைப்பாள்
சாற்றும்நம் விஞ்ஞானம் மெய்ஞானம் போல்
சமர்க்கூத்து செய்திடுவாள், மாற்றி மாற்றி
காற்றுக்கும் கடலுக்கும் நடுவே துள்ளும்
கடலலையாய் எனையாட்டும் கைகள் சக்தி!
விவேக்பாரதி
7-10-2021
ஆஹா அருமை ...
ReplyDelete