2. அன்னமிடும் கைகள் | நவராத்திரி 2021


அன்னமிடும் கைகளுக்கு வணக்கம் - எனை
ஆதரிக்கும் தாள்களுக்கு வணக்கம்
உன்னவுன்னத் தெவிட்டாத மயக்கம் - எனக்
குள்செலுத்தும் நாமத்துக்கும் வணக்கம்
வண்ணவண்ணக் கண்களுக்கு வணக்கம் - இந்த
வாழ்வுதந்த அம்பிகைக்கு வணக்கம்
பண்விரும்பும் காதுகட்கு வணக்கம் - அண்டம்
பாய்ந்தலையும் கூந்தலுக்கும் வணக்கம்

அற்பனென நானிருந்தேன் தனித்து - நீ
அண்டிவந்தாய் என்னகண்டாய் கணிப்பு?
சிற்பியென ஆக்கிவிட்டாய் பிழைப்பு - நீயே
சித்திரமாய் உள்நுழைந்தாய் சிறப்பு!
கற்பனையும் கலைநயமும் கொடுத்து - நீ
கட்டிவிட்ட சிறகுகளாய்க் கணக்கு
விற்பனம்செய் வானமென்றாய் எனக்கு - வா
விளையாடு பொம்மையுன்றன் பொறுப்பு

பூங்கழலில் மலராக விருப்பு - உனைப்
புகழ்ந்தபடி வாழ்வதற்கே பிறப்பு
தேன்குவளைப் பூநிறத்தில் விழிப்பு - உன்
தேகமெங்கும் தீராத கருப்பு
மாங்கனியோ மாதுளமோ சிரிப்பு - பேர்
வாயுரைத்தால் தேன்பலவின் இனிப்பு
தூங்கையிலும் நீதானென் நினைப்பு - அடி
தொடருதடி காலகாலப் பிணைப்பு

ஓடவிட்டுப் பார்க்கின்றாய் நடிப்பு - உன்
ஒய்யாரம் ஆஹாஹா சிலிர்ப்பு
தேடவிட்டுத் தருகின்றாய் படிப்பு - அதில்
தேறிவரும் ஒவ்வொன்றும் மதிப்பு
பாடுவதே என்னுடைய உழைப்பு - அந்தப்
பாட்டினிலும் நீதானே இருப்பு
ஆடகபொன் மாமயிலே அணைத்து - எனை
ஆயுள்வரை உன்மடியில் அமர்த்து

காலடியில் பூவாக மலர்த்து - என்
கவிதைகளைக் காப்பாற்றி உயர்த்து
ஓலமிடும் நெஞ்சத்தை நிறுத்து - உள்ளே
ஓமென்னும் சுருதிமட்டும் பொறுத்து
சூலமெனக் குங்குமத்தை அளித்து - அதன்
சூட்டினிலென் பனியையெலாம் உலர்த்து
வாலையெனத் தோளிணைந்து நடத்து - நீ
வந்துவிட்டால் தீருமடி தவிப்பு!!

Comments

  1. ஆஹா! மேனியெல்லாம் சிலிர்ப்பூட்டும் கவிதை! அனுபவித்து எழுதி இருக்கிறாய் விவேக்!

    ReplyDelete

Post a Comment

Popular Posts