அவன் கோப்பையின் குரல்


நேற்று கவியரசர் கண்ணதாசனின் நினைவு தினத்தையொட்டி நண்பர்கள் ஒரு படத்தை வரைந்து பதிவிட்டிருந்தனர். கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடிய கவியரசரை நினைந்து, கோப்பைக்குள் அவர்கள் இட்டிருந்த ஐஸ் கட்டிகள், எனக்குப் பிறர் காயம் தணிக்க ஒத்தனம் கொடுக்கும் மருந்தாகவும் காட்சி அளித்ததாக அவர்களிடம் குறிப்பிட்டேன். பின்னர் சில நொடிகளில் பிறந்தது, இந்தக் கோப்பையில் இரங்கற்பா... 

கொஞ்சம் கொஞ்சம் என்னைத் தொட்டுக் 
கொஞ்சிய கோமகனே - உன் 
கோபம் எல்லாம் என்னில் கரைத்துக் 
குழந்தை ஆனவனே 
அஞ்சேல் என்ற கிருஷ்ணன் காட்சி 
என்னில் கண்டவனே - உடன் 
அஞ்சுகக் கைகள் பஞ்சனை எல்லாம் 
அளந்து கொண்டவனே!

அரசியல் மேடை உரசல்களில் நீ 
அமைதி இழக்கையிலே - எனை 
ஆரத் தழுவி ஈரக் கனவில் 
அமிர்தம் உண்டவனே
விரசமும் தெய்வ விஷயமும் பாடி 
விதைகள் செய்தவனே - உன் 
விரலில் பேனா, அடுத்தது என்னை 
விதந்தெ டுத்தவனே 

என்னைப் பாடிய உன்னைக் கொஞ்சம் 
எண்ணிப் பாடுகிறேன் - நீ 
என்னில் கரைந்த நொடிகள் எண்ணி 
ஏக்கம் சூடுகிறேன் 
மின்னல் என்னில் கண்டாய் அப்பா 
மீண்டும் அதைபோலே - யார் 
மீட்ட வருவார் கோப்பை நான்தான்
வீணை ஆகின்றேன்

கோப்பை பெற்ற கவிஞர் பல்லோர் 
குழைந்து தவழுகையில் - நீ 
கோப்பை தொட்ட கவிஞனாகக் 
கூராய் நின்றிருந்தாய் 
யாப்பைத் தொட்டுப் போட்டிகள் இட்டு 
யார்யாரோ பாட - நீ 
எல்லாருக்கும் பாட்டுகள் செய்து 
யவ்வனம் கொண்டிருந்தாய் 

உலகில் உள்ள மதுவை எல்லாம் 
உண்ணத் தலைப்பட்டாய் - பின் 
உலகை விடுத்துக் கண்ணன் அழைக்க 
உடனே புறப்பட்டாய் 
நிலையில் லாமல் கைக்கும் வாய்க்கும் 
நிழலாய் ஆடிவந்தேன் - இங்கே 
நீதொடும் ஸ்பரிசம் இல்லாததனால் 
நிம்மதி இழக்கின்றேன்

முத்தை யாவெனும் சின்னஞ் சிறுவனை 
முதன்முறை நான் கண்டேன் - பின் 
முழுவாழ் வினிலும் கண்ண தாசனே 
முன்னே வாழ்ந்திருந்தான் 
எற்றைக் கந்தச் சிறுவனை மீண்டும் 
எளியேன் காண்பதென - உன் 
இரவில் பகலில் எல்லாப் போதும் 
ஏந்திய கையிருந்தேன் 

வாழ்பவ ரெல்லாம் உன்னைப் புகழ்ந்து 
வார்த்தைகள் பேசுகிறார் - சிலர் 
வாழ்த்துகள் பாடி, மெல்லிசை சூடி 
வருடுகிறார் அரசே 
ஆழ்ந்தனை என்னில் உன்றனை நானும் 
அர்ச்சனை செய்கின்றேன் - உன் 
அந்த ரங்கத்தின் சொந்தம் என்றுதான் 
ஆடிச் சிரிக்கின்றேன்

கண்ண தாசனே கவிதை ராஜனே 
கையின் வசமானேன் - அதில் 
கண்ணன் தரிசனம் கன்னி கரிசனம் 
கண்டேன் நிஜமானேன் 
இன்றும் உன்னையே எண்ணி தனிமையில் 
இருந்து பாடுகிறேன் - நீ 
இங்கிருப்பதாய் நினைத்துக் கொண்டுநான் 
இருப்பு நடத்துகிறேன்!!

-விவேக்பாரதி
17-10-2021

Comments

Popular Posts