யாரோ ஏதோ!

யாரோ வருகிறார்! அவர்
ஏதோ தருகிறார்!
சீரோ சிறப்போ பேரோ புகழோ
ஏதோ தருகிறார்! ஆம்
யாரோ வருகிறார்!

வானத்தி லிருந்தே அவர்வரு கின்றார்
   மனிதரைப் போல்வரு கின்றார்!
ஞானத்தைத் தரவே அவர்வரு கின்றார்
   நல்லுள மாய்வரு கின்றார்!
தானமும் தவமும் செய்பவர்க் கருகில்
   தங்கிட வேவரு கின்றார்!
கானமும் கவிதையு மாய்வரு கின்றார்
   கலைகளி லேவளர் கின்றார்!

காற்றின சைவில், மலரின் சிரிப்பில்,
   கடலலை காட்டிடும் விசையில்,
ஏற்றிய திரியில், எதிர்ப்படும் குயிலின்
   எழில்குர லெழுப்பிடும் இசையில்,
ஆற்றலில் எல்லாம் அவர்சிரிக் கின்றார்!
   ஆதவன் மதிநிறைக் கின்றார்!
ஆற்றினில் மணலை அள்ளுமி டத்தும்
   அவருடல் நொந்தழு கின்றார்!

ஒற்றுமை இல்லா ஊரினைக் கண்டால்
   உளமிகத் துயருறு கின்றார்!
கற்றவர் எல்லாம் கயவர்க ளாகக்
   கண்ணுற மனம்கொதிக் கின்றார்!
உற்றவர் போனால் உதவிகள் ஏது?
   உயிருடல் உள்ளமும் ஏது?
சற்றிது நினைவோம் வருபவர் தெய்வம்!
   சகவுயி ராவதும் தெய்வம்!!

-விவேக்பாரதி
21.05.2018

Comments

Popular Posts