ஈசனை எண்ணி


சூல்கொண்ட பொய்யும் சுழற்றிடும் ஆசையும்
வேல்போலப் பின்தொடரும் வேதனையும் - நாள்கொண்ட
வாசனையும் நீங்கி வளம்பெறவே சித்தத்தில்
ஈசனை எண்ணி இரு! 


இருவினையும் மும்மலமும் இம்சையெனச்சுற்றப்
பொருள்தேடும் நெஞ்சம் பொருத - இருட்காட்டில்
தத்தளிக்கும் நேரத்தில் தாங்கவரும் பொற்கிரணம் 
முத்தணித்த வெள்ளி முகம்!

முகம்பார்த்துப் பாடி முகிழாத போதும்
அகம்பார்த்துத் தேடி அகழாத போதும்
ஜகம்பார்க்க நெஞ்சில் ஜனிக்கின்ற ரூபம்
சிகைத்தோற்ற மான சிவம்!

சிவமே இமயம் சிவமே உலகம்
சிவமே உயிரின் சிவிகை - சிவமே
பவம்நீக்கும் பற்று பரக்கருணைத் திட்டு
தவம்தேக்கு நெஞ்சே தளர்ந்து!
தளரும் மனத்தினைத் தாங்கும் சிவமே
வளரும் கொடிக்கு வலுவும்! - மிளிரும்
சடைமேல் இருக்கும் நிலவும் நெருப்பும்
இடைமேல் அதளும் இதம்!

இதமென நாதத் திசையென வேதப்
பதமெனப் பாடும் படியே - நிதமும்
நடம்புரி ஈசன் நமன்பயம் எற்றி
உடம்பிடை ஆவான் உயிர்!

உயிருக்குள் ஆடும் உமைநாதன் ஆட்டம்
பயிருக்குள் காற்றும் பயிலும் - வெயிலுக்கு
நீழல் மழைக்குக் குடையும் சிவனேதான்
வாழல் நமக்கு வரம்!

வரமென்று கேட்காது வாரி வழங்கும்
கரமந்த ஈசன் கரமே - சிரமொன்று 
பற்றிவிடத் தாளிரண்டு பற்றும்கை தானிரண்டு
பற்றிவிடு நெஞ்சே பரந்து!

பரந்து கிடக்கும் பரத்தின் வடிவம்
இரக்கும் விழியில் இறங்கும் - விரைந்தே
இடல்செய்யும் கையில் இறைவன் தெரிவான்
கடன்செய்க ஈதல் கடன்!

கடனே உடலம் கடனே உலகம்
கடனே உயிரின் கசிவும் - உடனே
சிவநாமம் சொல்லிச் சிவலோக நாடும்
தவம்செய்யக் கொள்நெஞ்சே சூல்!

-விவேக்பாரதி
11.05.2018

Comments

Popular Posts