கடைமொழி மாற்று

"கடைமொழி மாற்று" என்பது ஈற்றடியின் ஈற்றுச் சொல்லை முன்பு கொண்டுவந்து வைத்து பொருள்கொள்ளும் அணியாகும்.

1)

மயிலும் அலறிடும் ஆந்தை பகலிற்
துயிலாது கூவும் ! மிகவும் - ஒயிலாய்க்
குயில்கீச் சுங்குருவி பேசும் ! வெயிலில்
பயிலாக் கிளியக வும் !

2)

முதல்நூல் சிலம்பே முதுநூல் மணியே
அதனோ(டு) இணைகுண் டலமே - இதுவரை
யாரும் அறிந்திடா யாப்புக் களஞ்சியம்
பாருவக்கும் தொல்காப் பியம் !

கருத்து:

1)
"அகவும்" என்ற சொல்லை முதலில் இட்டுப் படித்தால் மயில் அகவும் , ஆந்தை அலறும், துயிலாது குயிலும் கூவும், கீச்சும் குருவி, பேசும் கிளி என்று என்று பொருள் படும்.

2)

"பாருவக்கும் தொல்காப் பியம்" என்னும் ஈற்றடியை முதலில் இட்டு படித்தால் பாருவக்கும் தொல்காப்பியம் முதல்நூல், சிலம்பே முதுநூல், மணிமேகலை அதனோடு இணை, குண்டலம் இதுவரை யாரும் முழுதாய் அறியாத யாப்புக் களஞ்சியம் என்று பொருள்படும்.

சிறப்பு :

முதல் பாடலில் மட்டும் உள்ள சிறப்பு என்னவென்றால் அகவும் என்ற ஈற்றுச்சொல்லை முதலில் இட்டாலும் வெண்பாவின் தளையும் ஓசையும் மாறாது...

இவ்வாறு :

அகவும் மயிலும் ! அலறிடும் ஆந்தை !
பகலிற் துயிலாது கூவும் - மிகவும்
ஒயிலாய்க் குயில்!கீச் சுங்குருவி ! பேசும்
வெயிலில் பயிலாக் கிளி !
 
-விவேக்பாரதி
24.02.2015

Comments

Popular Posts