வாழ்க்கைக் கோப்பை

நான் உன்னைச் சுமந்து
நகர்வரும் தோனி,
நீயோ உயர்ஞானி!
நான் உன்னைப் பிடிக்க
நடிக்கும் விட்டில்,
நீயோ பெருவிளக்கம்!
நான் உன்னைப் புகழ
உதித்திடும் சொற்கள்,
நீயோ அகராதி!
நான் நானெனத் துள்ளும்
ஆணவத் துள்ளல்
நீயோ நானெனும்நீ! 


குருவே குருவே இறைவடிவே
ஊமைக் குதவும் உமைநிதியே!

அறியா மைக்கா மத்தியிலே, - அறி
    யாதவன் நிற்கையிலே
பொறுமை யில்லா பக்தியிலே - மனப்
    போக்கைச் செலுத்தையிலே
நெறிகாட் டத்தான் நீவந்தாய் - கர
    நெருப்பை ஏந்திவந்தாய்
உறிவெண் ணெய்நான் உருகுகையில் - மன
    உறுதியை நீதந்தாய்!

குருவே குருவே இறைவடிவே!
ஊமைக் குதவும் உமைநிதியே!

நிலையா யிருக்கும் எண்ணத்தில் - மன
    நிம்மதி தொலைத்தேனே!
கலையா திருக்கும் ஆசையிலே - என்
    கனவில் அலைந்தேனே!
தலையா யிருக்கும் கடமைகளை - நான்
    தட்டிக் கழிக்கையிலே
அலையாய் வந்தாய் நீதொட்டாய் - என்
    அறிவை அடைந்தேனே!

குருவே குருவே இறைவடிவே!
ஊமைக் குதவும் உமைநிதியே!

விண்ணோக் கத்தின் நினைவெல்லாம் - மிக
    விரிந்த பொருளெல்லாம்
கண்ணோக் கத்தின் உரையெல்லாம் - ஒரு
    கனிவுத் தீண்டலிலே
பண்ணோக் காகத் தந்தவனே - உள்
    பாடல் தந்தவனே
என்னோக் கத்தில் நீயொருதாய் - நான்
    ஏந்தும் சிறுமழலை!

குருவே குருவே இறைவடிவே!
ஊமைக் குதவும் உமைநிதியே!

கர்வம் கோபம் ஆங்காரம் - என்
    கண்ணை மறைக்கையிலே
சர்வம் அறியாச் சிறுகுதலை - மனத்
    தாண்டவம் செய்கையிலே
கர்வம் பொடிபட நீநின்றாய் - உன்
    காலில் சரணடைந்தேன்
தர்க்கம் ஐயம் பொடியாக - நான்
   தங்கம் போலொளிர்ந்தேன்!

குருவே குருவே இறைவடிவே!
ஊமைக் குதவும் உமைநிதியே!

சிந்தாத் துளியா? தனிமையிலே - நான்
    சிதைக்காக் கனவுகளா?
தந்தால் விரும்பும் வாழ்க்கையிலே - நான்
    தாரா உரிமைகளா?
முந்தி முறிந்த துடுப்பொன்று - கரை
    மூலையில் சாய்கையிலே
வந்து கொடுத்தாய் ஓர்வாய்ப்பை - என்
    வாழ்க்கைக் கொருகோப்பை!

குருவே குருவே இறைவடிவே!
ஊமைக் குதவும் உமைநிதியே!!

-விவேக்பாரதி
02.05.2018

https://soundcloud.com/vivekbharathi/7ox2hatollnp

Comments

Popular Posts