வேண்டா மனம்
சத்தியம் சொல்லிடு வாயா? - மனம்
சல்லாபக் கட்டினிற் சிக்குறும் பேயா?
நித்தமும் ஆடுவ தென்ன? - இது
நீட்டி முழக்கிடும் விண்ணப்பம் என்ன?
சொல்லடி சொல்லடி காளி! - இதன்
சோதனை யாலுளம் எங்கணும் ஊழி!
நில்லடி நில்லடி காளி - என்
நினைவினில் ஏறிநீ கொல்லடி காளி!
ஒன்றை வெறுத்திடச் சொல்லும் - மற்
றொன்றை நினைத்து மருண்டது செல்லும்
நன்றைப் பிரிந்துப்பின் கூடி - இது
நாளும் நடித்திடும் நாடகப் பேடி!
நேற்றை நினைப்பது வாழ்வா? - நாளை
நேர்வதை எண்ணி நடப்பது வாழ்வா?
ஏற்றது மேதெனச் சொல்வாய்! - மனம்
என்றும் நிகழ்த்தும் பகைதனைக் கொல்வாய்!
மாய மனமின்னும் வேண்டா - அது
மாற்றி மாற்றிச்செயும் செய்கையும் வேண்டா
தாய்நின் அருட்பதம் போதும் - அதைத்
தாங்கிவிட் டாலினி ஏதுண்டு சேதம்?
-விவேக்பாரதி
16.10.2017
Comments
Post a Comment