உணர்வுற்ற தமிழர் பாட்டு

ஒயிற்கும்மி

நெஞ்சமி ருக்குநி மிர்வதற் கேயதில்
நேர்மையி ருக்குப ணிந்திடற் கே
    நெறியோடிரு வலியோடிரு
    களியோடிரு படையோடிரு
நேற்றைய நாட்டைத்தி ருப்புதற் கே!


அஞ்சுவ திங்கு நமக்குமில் லைநம
தாவியி னுள்ளிற்பு ரட்சிய லை!
    அழிவோமென வருவாரவ
    ரடியேவிழ யெழுவோமினி
ஆளுவ துண்மை!வ றட்சியி லை!

கொள்கைகள் உண்டுநம் நெஞ்சினி லேபெருங்
கோபக்க னல்பொங்கும் கண்களி லே
    குறையோமினி தமிழாமன
    மகிழ்வோமழ லெரிவோமொரு
கூற்றையுஞ் சாடுவம் பண்களி லே!

உள்ளத்தி லுள்ளது வீரமென் றேபகை
யூறைக்கொ ளுத்துவம் சாலநின் றே!
    உயிரோசையி லமிழ்தாகிடு
    தமிழேயுள தினியேதிட
ரூதுவம் சங்கவள் வாழியென் றே!

ஆளப்பி றந்தவர் நாங்கள டாயுண்மை
அன்புக்கு மட்டும டங்கிடு வோம்
    அதிகாரமு மறிவோருய
    ரறிவாலுய ரடைவோமெம
தன்னையைப் போற்றிவ ணங்கிடு வோம்!

தோளிலு றைவது வெற்றிய டாதமிழ்த்
தோகைக்க டம்பனின் செல்வர டா
    தொழுவோமெனி லமிழோமிட
    ரறிவோமெனி லளியோமட
தோன்றுமிப் பாருமெம் சொந்தம டா!!

-விவேக்பாரதி
02.04.2018

Comments

Popular Posts