ஒரு கவிதைக்கான காத்திருப்பு


கவிதைக் கான காத்திருப்பு - என் 
   கன்னம் வழியே கசிகிறது 
சுவைக்கும் பொழுதின் தவிதவிப்பு - என் 
   சொல்லின் வழியே சுடர்கிறது! 

அடங்க மறுக்கும் மனசாட்சி - தன் 
   ஆட்சி இழந்து நிற்கிறது 
உடலில் எங்கும் வியர்வைமழை - குளிர் 
   ஊற்றும் பொழுதும் பொழிகிறது! 

பக்கம் அமரும் பாவைமுகம் - என் 
   பருவம் காண மறுக்கிறது 
அக்கம் பக்கம் ஆட்கள்மயம் - அதில் 
   அசரா நெஞ்சம் துடிக்கிறது! 

குளிரும் கூடச் சுடுகிறது - என் 
   குருதிக் குள்போர் நிகழ்கிறது! 
வெளியில் தெரியா தென்றாலும் - என் 
   வேத னைகள் இனிக்கிறது! 

ஒற்றைக் கணத்தில் வந்தபுயல் - என் 
     உலகை மொத்தம் அழிக்கிறது 
சற்று விலகிப் பார்த்தாலோ - அதன் 
   சமையல்  கவிதை கொடுக்கிறது!!

-விவேக்பாரதி
13.04.2018

Comments

Popular Posts