நதி இணைத்தல்
எதுபலம் தோழரே! நீங்களே சொல்வீர்!
எதுசரி மக்களே! சிந்தனை செய்வீர்!
இவ்விடம் இந்நிலம் என்றறிந்தா - மழை
இதயம் திறந்து பொழிகிறது?
எவ்விடம் சேருவம் எனத்தெரிந்தா - காற்று
ஏறி வான்மேல் திரிகிறது?
இவர்நிலம் அவர்நிலம் எனப்பிரித்தா - நதி
இமயத் தியக்கம் தொடர்கிறது?
அவரவர் சுயநலம் அடைத்துவைத்தோம் - ஓர்
அவசியம் ஆயின் இணைப்பிலென்ன?
ஒன்றாய் வாழ்வது பலமானபின் - பாதை
ஒடியா திருப்பது சுவடானபின்
நன்றாய் நதிநீர் இணைத்தாலென்ன - இதில்
நமக்கே வலிமை! செய்தாலென்ன?
நாட்டுக் குள்ளே ஒற்றைநதி - அது
நடுவில் ஓடும் ஜீவநதி
காட்டுக் கரைகள் எனவளர்த்தல் - நெற்
கலைக்கே முதன்மை என்றுபல
தங்கச் சட்டம் அமைத்திடலாம் - அதைத்
தக்கோர் நனவாய் ஆக்கிடலாம்
கங்கை பொருநை ஓருருவே! - அட
காவிரி வைகை நீருருவே!
கலப்பில் குறைகள் அவைசொல்லா - விதி
கடலென் றறிந்தும் அவைகலையா!
கலப்பில் வலிமை உண்டன்றோ - பழங்
கதைகள் காட்டும் அறமன்றோ!!
-விவேக்பாரதி
08.09.2017
Comments
Post a Comment