சமயபுரத் தேர்

சித்திரையில் முத்துமாரி தேர் வருகிறது - அவள்
    சிவந்தமேனி ஏந்திக்கொண்டு தேர் வருகிறது
இத்தரையில் மாரியம்மன் தேர் வருகிறது - நமக்
    கின்பமெல்லாம் அள்ளித்தர ஊர் வருகிறது!


தேர் வருகிறது - அது
ஊர் வருகிறது!

சமயபுரத் தாளமர்ந்த தங்கத் தேரடா - தம்பி
    சகலவினை தீர்க்குமுமை சொந்தத் தேரடா
நமையும்காக்க நன்மைதேக்க உருளும் தேரடா - பக்தி
    நினைப்பினிலே வந்தகூட்டத் திரளைப் பாரடா!

தேர் வருகிறது - அது
ஊர் வருகிறது!

தங்கக்குதிரை ரெண்டுபூட்டி நகரும் தேரடா - புவி
    தாங்குகின்ற முத்துமாரி அமரும் தேரடா
எங்கும்சக்தி கோஷம்பொங்க நின்ற தேரடா - பகை
    ஏறிமாய்த்த தேவிவந்து வென்ற தேரடா!

தேர் வருகிறது - இங்கே 
ஊர் வருகிறது!

வடம்பிடிக்க வந்தமக்கள் வாட்டம் போகுமே - அவள்
    வட்டவிழி பட்டுவிட்டால் வலிமை செருமே!
குடமெடுத்துத் திரண்டுநிற்கும் பக்தர் கூட்டமே - மனம்
    கும்பிட்டால் அன்னையருள் நமக்குள் ஈட்டமே!

தேர் வருகிறது - இங்கே
ஊர் வருகிறது!

வீதியெங்கும் குங்குமத்தை வீசு கின்றதே - அது
    வீணர்தம்மை ஏய்க்கவந்து மோது கின்றதே
ஓதுகின்ற கோஷமெல்லாம் தேரிழுக்கவே - கரம்
    ஓம் சக்தி சக்தியென்று சேருகின்றதே!

தேர் வருகிறது - அம்மன்
தேர் வருகிறது!
ஆஹா!
ஊர் வருகிறது - இங்கே
ஊர் வருகிறது!!
 
-விவேக்பாரதி
17.04.2018

Comments

Popular Posts