ஆட்டம் தொடங்கட்டும் - சந்தவசந்தக் கவியரங்கம்
- இறை வணக்கம் -
கால்தூக்கி ஆடுகின்ற காளனுடன் சூலமெனும்
வேல்தூக்கி ஆடுகின்ற வேட்கையினாள் - மேல்தூக்க
நாட்டியவி நாயகனாய் நாடுவந்த தெய்வதமே
பாட்டிதுவும் பீடுறவே பார்!
- தலைவர் வணக்கம் -
புதுவைக் குயிலைப் புதுவிதப் பாக்கள் புனைந்தளித்து
மதுவைக் கவிழ்க்கும் மலையை இந்நாள் மகத்துவமாய்
புதுமைக் கவிதைப் பெருஞ்சுட ரான புனிதமிகு
கதிரை தியாகத் தரசரை வாழ்த்திக் கவிப்பவனே!
- அவைக்கு நன்றி -
செந்தமிழ்ச் சொற்கள் ஆடும்
செழுமிகு மரபுக் கூடம்
பைந்தமிழ்க் கவிஞர் ஆடும்
பழகுநல் அரங்கக் கூடம்
நந்தமிழ்ச் சான்றோர் ஆடும்
நாவுடை மன்றில் இங்கே
எந்தமிழ் ஆடு தற்கும்
எமக்கிடம் தந்தீர் நன்றி!
- ஆட்டம் தொடங்கட்டும் -
கொடுத்திருக்கும் தலைப்பைத்தான் எண்ணிப் பார்த்தால்
கொள்ளைகொள்ளை ஆனந்தம் மனத்துக் குள்ளே
விடுத்திருக்கும் கட்டளையோ கவிதை யாக்க,
விளையாடிப் பார்த்திடவோ நெஞ்சம் சொல்ல,
எடுத்திருக்கும் எண்ணத்தை ஏற்ற வாறாய்
ஏற்றிட நினைக்கின்றேன்! செவிகள் தம்மை
மடுத்திருக்கும் உளங்களுக்கென் வணக்கம்! இந்த
மகத்தான தலைப்புதந்த வர்க்கோ நன்றி!
ஆட்டந்தொ டங்கட்டும் எனும்த லைப்பை
ஆர்தருவார் கூறுங்கள்! எண்ணிப் பார்த்தால்
நாட்டுக்குள் ஆயிரம்பேர் சொன்ன வார்த்தை
நாடகத்தில் காவியத்தில் உள்ள வார்த்தை!
பாட்டுக்குள் செயலுக்குள் பல்லோர் சேர்த்துப்
பகிர்ந்திட்ட நல்வார்த்தை! இதனை இந்த
வேட்டுக்குக் குதிபோடும் சிறியன் முன்பு
வைத்துவிட்டார் தொடங்கட்டும் என்றன் ஆட்டம்!
முதன்முதலாய்ச் சிலம்பிசைத்த இளங்கோ அந்நாள்
முத்தமிழின் வாழ்த்துதனைக் கேட்டி ருந்தால்
இதுதொடக்கம் தொடங்கட்டும் ஆட்டம் என்றே
இன்றமிழாள் வாய்திறந்து மொழிந்தி ருப்பாள்!
விதவிதமாய்ச் சந்தங்கள் இசைத்த கம்பன்
வினைமுன்னம் வாணிதமைக் கேட்டி ருந்தால்
சதமடிப்பாய் தொடங்கட்டும் ஆட்டம் என்றே
சத்துடைய மொழிசொல்லி மகிழ்ந்தி ருப்பாள்!
தொடங்கட்டும் ஆட்டமெனும் வார்த்தை தானே
தொல்லைதரும் பகடைதனைத் தூக்க வைத்து
முடங்கட்டும் சூதுடைய மக்கள் வாழ்க்கை
முழங்கட்டும் போர்முரசம் என்ற தங்கே!
தொடங்கட்டும் ஆட்டமெனும் வார்த்தை தானே
தொட்டாலே தீயாகும் அசுரன் சக்தி
அடங்கட்டும் எனமாலன் சூழ்ச்சி செய்ய
அரக்கன்தமை அழித்தற்கு நின்ற தங்கே!
சதிராடும் ஆட்டங்கள் தொடங்க வென்றே
சரியாகக் கைகாலில் நூல்கள் கட்டி
விதியென்று பொம்மைகளை ஆட்டி வைக்கும்
வித்தையுடை யோன்வாழ்க்கை நடத்து கின்றான்!
அதிர்ஷ்ட்டமெனும் ஒருபொருளை நம்பிக் கொண்டு
அணியிரண்டும் முன்னிருந்து காசைச் சுண்டி
பதில்பார்த்தல் சொல்வதென்ன அந்த ஆட்டம்
பக்குவமாய்த் தொடங்கட்டும் என்று தானே!
திரைதிறந்து மேடையிலே விளக்க ணைத்தல்
திரளாக மக்களுந்தம் கைகள் தட்டல்
வரைவிக்கும் செய்தியென்ன வண்ணம் மிக்க
வளையாட்டம் சிலம்பாட்டம் தொடங்க வென்றே!
நரைவந்து மொழிமாறி நடைத ளர்ந்து
நமக்குரைக்கும் பொருளென்ன தலையைத் தொட்டு
விரைவாக பிறவுறுப்பின் ஆட்டம் அங்கே
வினைபோலே தொடங்கிவிடும் என்று தானே!
காக்கைகளின் சிறகாட்டம் தொடங்கி விட்டால்
காற்றெல்லாம் அதனாட்சி! நெஞ்சுக் குள்ளே
பாக்களதன் பொருளாட்டம் தொடங்கி விட்டால்
பக்குவங்கள் உள்ளங்கைக் கனியைப் போன்று!
நாக்குகளும் தம்மாட்டம் தொடங்கி விட்டால்
நம்மெண்ணம் சொல்வடிவை ஏற்கு மன்றோ?
பூக்களின்மேல் தேனீக்கள் தொடங்கும் ஆட்டம்
பூந்தேனின் போதையினால் நிகழ்வ தன்றோ!
பிறந்தவுடன் தொடங்குகிற மனத்தின் ஆட்டம்
பிரிவுவரை நாளெல்லாம் தொடரும் கூத்து!
இறந்தவுடன் தொடங்குவது நினைவாய் ஆட்டம்
இயலன்பு கொண்டவரின் நினைப்பில் மட்டும்!
சிறந்தவுடன் தொடங்குகிற தலையின் ஆட்டம்
சீரழிக்கும் கர்வத்தின் அறிக்கை கண்டீர்!
மறந்திங்கே மனிதர்கள் திரிந்தால் கூட
மாநிலத்தில் ஆடாதான் வாழ்க்கை இல்லை!
ஆதலினால் ஆடிடுவோம் உலகம் உய்ய,
அன்பென்னும் இசைகேட்டுத் தொடங்கும் ஆட்டம்!
காதலினால் பருவங்கள் கொள்ளும் ஆட்டம்!
கருத்துக்குள் எண்ணங்கள் எழுப்பும் ஆட்டம்!
நாதமெனும் இசையாட்டம் இறைவன் ஆட்டம்
நாளெல்லாம் மனத்தாட்டம் அவனின் ஆட்டம்
மீதமுள்ள நாள்வரையில் ஆடி நிற்போம்
மீண்டுவந்தால் நம்மாட்டம் தொடரும் தானே!!
-விவேக்பாரதி
29.04.2018
Comments
Post a Comment