பூக்குடையும் பூக்கூடையும்


பூக்குடை வைத்த பூக்கூடை - இவள் 
   பூமியில் நகரும் தேன்சோலை 
பாக்கடை வைக்கும் பாமாலை - உடல் 
   பாற்கடல் வெண்ணெய்! பாலாடை! 

நடப்பது போலத் தவழ்ந்திடும் காற்று 
   நளின அழகினில் ரம்பையின் மாற்று 
கடிப்பது போலப் பார்த்திடும் மங்கை 
   கவிதை இவளது காலில் சதங்கை! (பூக்குடை) 

சாலையில் நகரும் தேவதை வம்சம் 
   சரிக்கப் பிறந்த ரதியின் அம்சம்! 
காலையும் மாலையும் அழகியல் பேசும் 
   கருப்புக் கூந்தலில் சந்தனம் வீசும் (பூக்குடை) 

ஒருபுறம் கன்னி எதிரினில் வந்தால் 
   உள்ளம் அலைபாயும் - கொடும் 
திரிபுரம் கண்ட தீயென துள்ளே 
   திரண்டு மெருகேறும்! 

திரும்பிப் பார்த்தால் பார்த்த நொடியிலே 
   திக்குகள் பொடியாகும் - முகை 
அரும்பச் சிரித்தால் ஆயிரம் மின்னல் 
   அகத்தில் உருவாகும்! அட (பூக்குடை) 

-விவேக்பாரதி 
27.04.2018

Comments

Popular Posts