அணையுடை அழகே!


அழகே!
அடங்கி இருந்தது போதும்
அணையுடைத்து வெளியே வா!
உன் காதலன் நீயின்றி
உணவு கொள்ளாமல்
வறட்சியில் வாடுகிறேன்!

நீ எப்படியும் இறுதியில்
என்னோடு தானே வீழ வேண்டும்?
இப்போதே வா!
நாம் வாழ வேண்டும்!
நீ பிறந்த வீட்டில்
உன்னைப் பூட்டி வைத்திருப்பதால்
நம் காதலென்ன
நசியவா போகிறது?
என் மனமுடைக்கத் தெரிந்த உனக்கு
அக்கதவை உடைக்கவா தாமதம்?
அழகே! அணையுடைத்து வெளியே வா!

உன் காதலன்
கரைவது கேட்கவில்லையா?
உன் கண்ணென்ன
போகத்திரை மறைவிலா?
கண்ணுக்குத் திரைபோடலாம்
காட்சிக்குத் திரையேதடி?

என் நிலை அறியாத
உன் வீட்டார்
உன்னை அடைத்து வைத்து
என்னை வதைக்கிறார்கள்!
எனினும் நீ கலங்காதே!
கல்லுக்குத் தெரியுமா
கண்ணீரின் சூடு?

நான் உன்னைக் கேட்டுவிட்டேனாம்
என் சொத்தாக நீ வைத்திருந்த
அத்தனையையும் போட்டுக் கொளுத்துகிறார்!
வன்முறை வளர்வதல்ல கண்ணே
வளர்க்கப் படுவது!
அழகே! அணையுடைத்து வெளியே வா!

நம் காதலைத்தான்
இலக்கியங்கள் பாடுகின்றதே!
"நடந்தாய் வாழி" என்று!
இன்னுமென்ன வேண்டும் சான்று?

நீ பிறந்தது எங்கோ என்றாலும்
வளர்ந்து தவழ்ந்து நடமாடி ஓடுவது
என் மார்பு தானடி!
காதலியே!
என் காவிரியே!
அடங்கிக் கிடந்தது போதும்
அணையுடைத்து வெளியே வா!

நாம் தஞ்சையில் கூடி
புஞ்சைகள் பெற்றெடுக்கலாம்!
கல்லணையில் காதல் பேசலாம்!
கடைசியாக
வங்காள வரிகுடாவில்
வாழ்ந்து கலக்கலாம்!

நீ வெளிவரும்வரை நிறுத்தமாட்டேன்
என் காதல் பிரகடனத்தை!
என்ன செய்வான்
உன்னைச் சிறைவைப்பவன்!
நீ மட்டும் சிறகு கொள்!

மடல் கிடைத்ததும்
மாட்டிக்காமல் மறுமடல் போடு!
இப்படிக்கு உன் காதலன்
- தமிழ்நாடு!!
 
-விவேக்பாரதி 
 06.03.2016

Comments

Popular Posts