நடைப்பாட்டு

நடையென்னடா நமக்கு புதுசா?
நடடா! தம்பி நடடா!
படையா வரக் காத்திருக்கு
பாட்டுங் கவிதையுந் துணையிருக்கு!


எட்டு வைக்கும் நடையிலதான்
இந்தப் பூமி சுழலுதடா!
கிட்ட என்ன தூரம் என்ன?
நடக்கப் பாத விரியுமடா!

நெஞ்ச நிமிர்த்தி நடந்தாலே
வெண்ணிலாவப் புடிச்சிடலாம்
கொஞ்சந் தலைய குணிஞ்சு பாத்தா,
குட்டி ஒலக ரசிச்சிடலாம்!

நம்ம மண்ணுத் தாயோட
நடந்த படியே பேசிக்கணும்!
பொம்ம கூட சாவிக்கு நடக்கும்,
நாம எதுக்கு யோசிக்கணும்?

புழுதி பறக்க நடந்தாலே
பூமியோட ஒறவுவரும்
அழுத்தி நடந்தா அழுந்த நடந்தா
ஆயுள் கூட அதிகம்வரும்!

மரத்து நெழல் நமக்காக
மலரத் தூவி வரவேற்கும்
மண்ணு செழிக்க நாம நெலைக்க
நடக்க நடக்க பலமாகும்!!

-விவேக்பாரதி
13.08.2018

பாடலைக் கேட்கச் சொடுக்கவும்

Popular Posts