சிறைபட்ட நெஞ்சு


ஐயோ இரவே கொல்லாதே - நீ
    அழுத்தும் நிலையில் நானில்லை
ஐயோ நிலவே சிரிக்காதே - உடன்
    அழுதற் கிங்கே இடமில்லை
மையாள் விழிமேல் மையலுடன் - அவள்
    மனதைத் திருடும் ஆசையுடன்
பைய நுழைந்தேன் அதுவுண்மை - அவள்
    பட்டாள் சிறையில் அதுவுண்மை!


தொடுதிரைப் பேசி தொட்டபடி - நீ
  தொலைந்து போவாய் கொடுமிரவே
விடுகதை விழியை நினைந்தபடி - நான்
    விம்மி அழுவேன் கொடுமிரவே
அடுத்தினி காலம் உடன்மாறும் - என்
    ஆனந் தங்கள் எனக்காகும்
விடுதலை ஒருநாள் வரமாகும் - நீ
    விரைந்து நகர்வாய் கொடுமிரவே!

அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு - என்
    ஆதியும் அந்தமும் அவள்கணக்கு!
கவலைகள் நெஞ்சில் கலந்திருக்கு - இக்
    கவிதை தானே விஷமுறிப்பு!
அவதி படுத்தும் தனியிரவே - உன்
    அழிவை என்மேல் மட்டும்பொழி
அவளை எதுவும் செய்யாதே - அவள்
    அனிச்ச குணத்தாள் கொய்யாதே!

போப்போ இரவே! பகலேவா - என்
    பொல்லா ஏக்கம் மாயட்டும்
போப்போ கனவே! ஒளியேவா - இப்
    போக்குகள் எல்லாம் தீரட்டும்
போப்போ அழுகைத் துளியேபோ - இனி
    புலம்பக் கூடச் சொல்லில்லை
போப்போ துயரே! விடிவேவா - என்
   போதைக் காய்ச்சல் தெளியட்டும்!

மஞ்சந் தன்னில் என்னுடலம் - ஒரு
    மரத்தைப் போலே எரிகிறது
கொஞ்சும் சொற்கள் கேட்காமல் - என்
    கோபம் என்னை அடிக்கிறது!
நஞ்சைக் கலந்து மென்காற்று - பல
    ஞாப கங்களைக் கொல்கிறது!
மிஞ்சும் உயிரும் அவளுக்காய்த் - தவம்
    மின்னல் முனையில் செய்கிறது!

கொடுமை தாங்கும் அளவில்லை - இக்
    கொள்ளை இரவின் முடிவெங்கே
படியும் பனியும் இருளும்போய் - மனம்
    பார்க்கும் ஒளியின் களமெங்கே
விடியும் வரையில் போராட்டம் - அவள்
    இல்லா இரவில் நீரோட்டம்
நொடிகள் எல்லாம் ஆண்டாகும் - என்
    நெஞ்சே எனக்குக் கூண்டாகும்!!

-விவேக்பாரதி
11.08.2018

Popular Posts