ஆணைக்கா அரசி

No automatic alt text available.

சீர்பெற்ற அகிலாண்ட ஈஸ்வரிநின் சிறப்பின்றி
யார்பெற்றார் அரியணைகள் கவியாற்றல் யாப்புயர்வு?
பார்பெற்ற தாயேநின் காலடியில் பக்தனிவன்
நீர்பெற்ற கண்களொடு பாடிடவே நினைப்பேனே!


நான்கொண்ட எண்ணங்கள் யாவையும்நீ நல்கியதே
நான்கொண்ட ஆற்றல்கள் உன்னருளால் நண்ணியதே
வான்கொண்ட மழைபோல நின்கருனை வாழ்த்துமழை!
தேன்கொண்ட பூவென்னைத் திருப்பாதம் சேர்த்திடவே!

மனம்வைத்த மாத்திரத்தில் கண்முன்னே மந்திரத்தின்
இனம்வைத்த ஒலியோடு கவியெழுத இசைப்பவளே
தனம்வைத்த மேனியலால் சிறுமியெனத் தான்வந்து
சினம்வைத்த அடியனுக்கும் அருளின்பால் சிந்துகவே

ஆனைக்கா மேவியவன் பக்கத்தில் அருள்வழிய
தேனைத்தான் சிந்திடவே நிற்கின்ற தேவதையே
மோனைக்காய் எதுகைக்காய் எழுதாது முழுக்கவிதை
சேனைக்காய் நானெழுதும் ஆற்றலதைச் செய்யுகவே

அகிலாண்ட ஈஸ்வரிநின் அன்பின்றி அருளின்றி
பகையாண்டு கிடக்கின்ற பழிபட்ட பாரோரை
முகிலாண்ட பெருந்தாரை தானாக முகிழ்தல்போல்
தகையாண்டு நற்கருணை சாற்றுகவென் தாயருளே!

விவேக்பாரதி
03.08.2018

Popular Posts