சதி நடனம்

 
 
சலங்கையின் ஒலியோடே - தக
   தரிகிட தரிகிட இசையோடே
சடுதியில் ஆடுகிறாள் - சதி
   சந்தச் சிலம்பொலி போடுகிறாள்!
உலகுகள் அதற்கேங்கும் - பல
   ஊழிகள் அவள்நடம் தனைத்தாங்கும்
உயிர்களும் அதில்வாழும் - ஓம்
   ஓமெனும் சுருதியும் அதிலோங்கும்!

வானொரு மேடையென - நிலம்
   வாரிதி யாவையும் ஆடையென
வாழ்வெனும் மணிசிதறத் - தாய்
   வடிவுடன் எழில்நட மாடுகிறாள்
ஞானமெனும் விழியால் - அவள்
   நிர்த்தனம் நோக்கிட நோக்கிடவோ
நானவள் அவள்நானாய்ப் - பல
   நாட்களின் நாடகம் போடுகிறாள்!

மல்லிகை விண்மீன்கள் - அவள்
   மடியினில் குலுங்கிடும் பொன்மணிகள்
மனதினில் அவளாட்டம் - புதிர்
   மருமம் கிளப்பிடும் ஆர்ப்பாட்டம்
சொல்லினில் அவள்சந்தம் - கவி
   சொக்கி ஜதிசொல்ல அவள்நடனம்
சூரியன் ஒருநயனம் - பொழி
   சுடர்விடு மதியொளி மறுநயனம்

சிவனொரு பாகத்தில் - நுதல்
   சிவந்திடும் குங்கும வேகத்தில்
சிகையொரு தீக்கோலம் - பொறி
   சீறிடும் இருவிழி வாட்கோலம்
தவமொரு வழிகண்டீர் - எழில்
   தாய்நடம் கண்டிடத் தவம்புரிவீர்
தமிழ்க்கவி பாடிடுவீர் - அவள்
   தகதக தகவென முன்வருவாள்!

அம்பிகை ஆடுகிறாள் - சிவ
   ஹரசிவ ஓமெனப் பாடுகிறாள்
அன்பர்கள் ஆடுகிறார் - அவள்
   ஆட்டுவித்தால் எவர் ஆடுகிலார்?
நம்புதல் வழியாகும் - பின்
   நாள்தொறும் தோன்றிடும் அவள்நடனம்
நாம்வினை அவள்கர்த்தா - இதை
   ஞானமென் றரைவதும் சரியாமே!!
 
-விவேக்பாரதி 
31.08.2018

Popular Posts