எதை நாம் பெற்றோம்

Image result for indian flag


யார்பெற்றுத் தந்தாரிச் சுதந்தி ரத்தை?
    யார்கையால் பெற்றோமிச் சுதந்தி ரத்தை?
போர்பெற்றுத் தந்ததுவா? மக்கள் செய்த
    போகத்தால் வந்ததுவா? உயர்நா டென்ற
பேர்பெற்ற பாரதத்தைச் சிலபேர் வந்து
    பேடியென மாற்றிவிடக் கார ணம்யார்?
நீர்பெற்ற கண்ணுடந்தான் பெற்றோம்! கண்ணை
    நீசர்கள் குத்தும்வரை பொறுத்த வர்யார்?

வணிகத்துக் காயுள்ளே நுழைந்த மக்கள்
    வாணிபத்தைத் தாண்டித்தன் அதிகா ரத்தை
அணியணியாய்ப் படைவீரர் கொண்டு வந்து
    அமைத்திட்டார் நம்நாட்டில், வரலா றாகும்!
பணிந்துவந்து யவணர்களும் ரோமும் கூடப்
    பக்குவமாய் வியாபாரம் செய்ய விட்ட
துணிவுடைய நம்படையோ துணிச்சல் கெட்டுத்
    துட்டுக்கும் வசதிக்கும் விலைபோனாரே!

ஆள்வோர்மேல் நம்பிக்கை அற்றுப் போனால்
    அதன்பின்னர் நாட்டுப்பற் றெங்கே வோங்கும்?
தோள்சேர்த்து நிலங்காக்க உரிமை காக்கத்
    தோன்றுகிற நெஞ்சுரமும் எங்கே சேரும்?
ஆள்சேர்த்தார் அடிவருடி பலரைச் சேர்த்தார்
    அளவினிலே குறைந்தவர்தான் ஆட்சி செய்தார்
நாள்சேர்த்து வைத்திருந்த உணர்ச்சி யெல்லாம்
    நாற்றிசையும் பொங்கியதால் பெற்றோம் இன்று!

நாம்பெற்றோம்! எதைப்பெற்றோம்? பார்க்கப் போனால்
    நாமிழந்த ஒன்றினைத்தான் திரும்பப் பெற்றோம்!
ஆம்பெற்றோம் அரசாளும் உரிமை பெற்றோம்
    அதனூடே அவன்விதைத்த விதிகள் பெற்றோம்
தாம்பெற்ற வளமெல்லாம் போது மென்று
    தள்ளிவிட்ட நம்நாட்டைத் தானே பெற்றோம்!
காம்பற்ற மல்லிகைபோல் நாட்டைப் பெற்றோம்
    காம்புடையக் காரணமும் நாமே காண்க

யாராண்டல் நமக்கென்ன என்னுஞ் சிந்தை
    யமனாக மாறியது நமக்குத் தானே
போராடும் குணமின்றி இருந்த தாலே
    பொலிவெல்லாம் போனதுவும் நமக்குத் தானே
காரோடு நீரூற்றும் போதில் உப்பைக்
    கடைத்தெருவுக் கெடுத்துவந்தோம் கரைத்து விட்டோம்
பேரோடும் மாற்றங்கள் பெற்றோம் அந்தப்
    பேராலே இன்னும்நாம் தாழ்வோம் தானே!

வரலாற்றை ஒருகணம்நாம் திருப்பிப் பார்ப்போம்
    வந்தவர்கள் சென்றவர்கள் என்ன தந்தார்?
மரணத்தைத் தாண்டிநாம் என்ன பெற்றோம்?
    மகத்துவத்தை எவ்வளவு நாமி ழந்தோம்?
கரம்சேர எத்தனைபேர் முன்னே வந்தார்?
    காலங்கள் எத்தனைநாம் சண்டை போட்டோம்?
உரமாக இனியேனும் நேர்மை ஏற்போம்
    உள்ளத்தில் விடுதலையாம் பயிர்வ ளர்ப்போம்!

சிந்தியவை ஏராளம் அள்ளிக் கொண்டு
    சிதறியவர் ஏராளம்! நாடு காக்க
முந்தியவர் ஏராளம்! எழுந்த நாற்றை
    முறித்தவர்கள் ஏராளம் என்றால் கூட
தந்தார்கள் பெற்றுவிட்டோம் இனிமே லேனும்
    தரமான நாடாக வளரச் செய்வோம்
வந்தவரம் நம்கையில் பார தத்தாய்
    வாழ்த்துக்கள் அவள்மக்கள் நமக்கும்! ஜேஹிந்த்!!
-விவேக்பாரதி 
15.08.2018

Popular Posts