ஞாபகங்களே வணக்கம்


ஞாபகங்களே வணக்கம்! 
நல்ல உறவுதான் நமக்கும்! 

உன்னை எடுத்து உடுத்த உடுத்த 
என்னைக் கண்டேன் நான்! 
என்னை யாரென இயம்பத் தானோ 
உன்னைக் கொண்டேன் நான்?
தன்னை யாரென் றறியும் நினைவே 
ஞாபகம் என்கின்றார்! 
உன்னை எனக்குக் கொடுத்தவர்க்கு உன் 
ஞாபகம் இருக்கிறதோ?

நீயும் நானும் எப்படிச் சேர்ந்தோம் 
விஞ்ஞானம் என்பார்! 
நீயே நானாம்! நானோ இறையாம்! 
மெய்ஞானம் என்பார்! 
தீயாம், தீக்குள் தலைவால் எல்லாம் 
வகுத்திடல் சாத்தியமா?
ஓயா(து) அலையும் காற்றில் அடிமுடி 
சொல்லுதல் நடந்திடுமோ?

ஒரு கணத்திலே ஒரு விழிப்பிலே 
அழிந்து போவதாய், 
ஒரு திருப்பிலே ஒரு சொடுக்கிலே 
அனைத்தும் காண்பதாய், 
மறு கணத்திலே மன வனத்திலே 
மரித்து வீழ்வதாய் 
சிறு தினங்களைத் திரை அடுக்கிலே 
காட்டிச் செல்கின்றாய்! 

ஓ! ஞாபகங்களே வணக்கம்! 
நல்ல உறவுதான் நமக்கும்!!

- விவேக்பாரதி
24-07-2018

Comments

Popular Posts