இப்பொழுதே உழுதுவிடு

இனிமுடி யாதென் றியம்பிடும் போது
கனிந்திடும் தெய்வம் கவி!



இனிமேலும் இது தாங்காது
இப்போதே நீ உழுதுவிடு
தனிமை இனிமை தீரும் முன்னம்
தாராளத்தைத் தொடங்கிவிடு

வானம் பார்த்து வளைந்த மார்பில்
மோனத் திருக்கும் முழுமைப் போதில்
கானப் பயிர்கள் கண்கள் சிமிட்ட
ஞானத் தேரால் நல்ல பதத்தில்

இப்பொழுதே நீ உழுதுவிடு
இனிமேலும் இது தாங்காது!

சிம்மா சனத்தில் நானும் அமரச்
சும்மா சொற்கள் ஏவல் புரிய
இம்மா நிலைமை இருக்கும் போதே
அம்மா கவிதா அருகில் வந்து

இப்பொழுதே நீ உழுதுவிடு
இனிமேலும் இது தாங்காது!

தொடுவா னத்தைப் பிடிவா னாக்கிக்
கடலா ழத்தைக் கையாற் காட்டி
உடலா உயிரா உலகம் கடந்து
விடடா என்நான் விண்ணில் பாய

இப்பொழுதே நீ உழுதுவிடு
இனிமேலும் இது தாங்காது!

பாதை எங்கும் பாட்டின் நிழல்கள்
போதை போலென் பின்னால் தொடரத்
தீதா நன்றா பரவா யில்லை
ஏதா கிலும்வா என்மேல் நின்று

இப்பொழுதே நீ உழுதுவிடு
இனிமேலும் இது தாங்காது!!

-விவேக்பாரதி
12.06.2018

Comments

Popular Posts