தேவதைப் போட்டி


தேவதைப் போட்டிக்குத்தான் - அந்தத்
    தேவனும் உன்னை படைத்தனனோ? - இங்கு
நீவதை செய்வதெல்லாம் - ஒரு
    நீதி அறியாத பாலனையோ?- சிறு
பூவதைக் கன்னமென்றும் - செல்வப்
    பூச்சினைத் தேகத் தழகென்றும் நீ - எனை
மாவதை செய்யவந்தாய் - கையில்
    மாட்டித் தவிக்கவே நான்பிறந்தேன்!


கள்ளை விழியில்வைத்தாய் - அதைக்
    கண்ணுறும் போதினி லெப்பொழுதும் - என
துள்ளம் பதறவைத்தாய் - வாள்
    உயர்ரக ஈட்டிகள் சொல்லில்வைத்தாய் - கொடும்
முள்ளை நினைப்பில்வைத்தாய் - கொஞ்சம்
    முட்டி முரைத்துநீ எனைச்சிதைத்தாய் - பெரும்
வெள்ளக் கருணைவைத்தாய் - எனை
    வெல்லு மளவுக்குக் காதல்வைத்தாய்

என்றன் ஒருக்கரத்தில் - உன்
    எழிற்கரம் பற்றிடும் பலகனவை - மன
மன்றில் நிகழ்த்துகிறேன்- அதை
    மாற்றமி லாமல் இறை,பொழுது - நமக்
கென்றும் உதவிடட்டும் - அடி
    என்மனம் பேர்க்கத் தெரிந்தவளே - இனி
ஒன்றும் குறைவதில்லை - சக்தி
    ஓமென்று சொல்லியே காதலிப்போம்!!

#மௌனமடிநீயெனக்கு

-விவேக்பாரதி
28.06.2018

குரல்வழிப் பதிவு கேட்கச் சொடுக்கவும்

Comments

Popular Posts