என் கவிதா

 
நெஞ்சா? கலனா? நீவந்து
    நெருப்பைப் பற்ற வைக்கின்றாய்?
பஞ்சா திரியா என்னெஞ்சைப்
    பற்றிக் கொள்ளச் செய்கின்றாய்?
நஞ்சா அமிழ்தா குடங்குடமாய்
    நாளும் ஊற்ற வைக்கின்றாய்!
கொஞ்சா மல்நான் இருந்துவிட்டால்
    கோபம் கொள்ளும் என்கவிதா!

எழிலுக் கென்று வைத்தாயோ?
    ஏங்கித் தவிக்க வைத்தாயோ?
அழுதற் கென்று வைத்தாயோ?
    அன்பிற் காக வைத்தாயோ?
தழலை வைத்தாய் ஆகுதியாய்த்
    தானே என்னைக் கேட்கிறது!
மழலை கேளா திருந்துவிட்டால்
    மனத்தைப் பிழியும் என்கவிதா!

நீயோர் நெருப்பு! நீகாட்டும்
    நிழலும் நெருப்பு! இதற்கிடையில்
தீயோர் நெருப்பா? எனைப்பார்க்கத்
    திரும்பா முகமே நெருப்பென்பேன்!
சாயாக் கனலே எப்போதும்
    சாந்தப் புனலே என்றெல்லாம்
ஓயா துரைக்கா திருந்துவிட்டால்
    உடனே சினக்கும் என்கவிதா!

விதையும் நீதான் விருட்சம்நீ
    விசித்தி ரத்தின் விலாசம்நீ
சதையும் நீதான் உயிரும்நீ
    சத்தி யத்தின் பிம்பம்நீ
கதையும் நீதான் கர்த்தாநீ
    கதைமாந் தர்கள் அவர்கள்நீ
எதையும் தாரா என்னிடமே
    என்றும் வாழும் என்கவிதா!

நெருப்பை வைத்த கையாலே
    நெஞ்சை வருடு நான்சுடர்வேன்
நெருப்பைத் தந்த கண்ணாலே
    நேரே நோக்கு நான் தெளிவேன்
நெருப்பே நீதான் நெருப்புக்குள்
    நெளியும் ஒளியும் நீயன்றோ
நெருப்பே இருப்பே என்றுரைத்தால்
    நெஞ்சில் தங்கும் என்கவிதா!!

-விவேக்பாரதி
05.06.2018

Comments

Popular Posts