ஜனனி



ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ

இதயக் கூட்டைப் பிளந்து - அதிலே
   இமய மாகி வளர்ந்து
உதய மாகக் கிளர்ந்து - உடலுள்
   உயிரு மாகி அமர்ந்து
எதையும் செய்யும் கலைநீ - நெஞ்சை
    ஏவு கின்ற சிலைநீ
குதலை மொழியின் ஜனனி - மனதுக்
   குன்றில் மலரும் மலர்நீ!

ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ

திவலை யாகக் கசிந்து - அதனால்
    தினமு மாகி வழிந்து
கவிதை யாக மலர்ந்து - அதிலே
   ககனம் கடல்கள் அளந்து
குவியும் கருத்துக் கொருத்தி - அழிக்கும்
   குணமி லாத வொருத்தீ
சிவமும் ஆன வெளிநீ - அதற்குள்
   ஜீவ னான ஜனனி!

ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ

அனுப வத்துப் புனலில் - சிறிய
   அறிவுக் கலனில் உதவி
கனவுத் தோட்டத் துள்ளே - அழகுக்
   காவ லாகப் பரவி
எனையி ழுத்துக் கரைத்து - கருதும்
   எண்ண மாக நிறைத்து
நினைவில் நிற்கும் சுடர்நீ - அருளே
   நீழ லான ஜனனி!!

ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ

-விவேக்பாரதி
07.06.2018

Comments

Popular Posts