மிறைப்பா - வக்கிரவுத்தி

"ஒருவர் ஒன்றை நினைத்துச் சொல்ல அது வேறு பொருள் கொடுப்பது" வக்கிரவுத்தி என்னும் மிறைப்பாவின் இலக்கணம் ஆகும். இதனை இரண்டு வகையாக எழுதலாம். ஒன்று வெளிப்படையாக பொருள் அமைவதாகப் பாடுவது. இன்னொன்று மறைமுகமான இருபொருள் ஒருமொழி சொற்களைக் கொண்டு பாடுவது.

1) காதல் தாய்

என் தாயைப் பற்றி நான் பெருமையாகப் பேச என் நண்பன் காதலியைத்தான் புகழ்கிறேன் என்று நினைத்தல்.

அவளன்றி வாழ்வில்லை என்று சொன்னேன்,
    அவசரத்து நண்பனவன் "காதல்" என்றான்!
அவளின்றி உயிரில்லை என்று சொன்னேன்,
    அனைவருமே சொல்வதுதான் என்று சொன்னான்!
அவளின்றி உடலில்லை என்று சொன்னேன்,
    அழிவுக்கும் வழிகாட்டும் காதல் என்றான்!
அவளென்றன் தாயென்றேன், தாரம் தம்மை
    அப்படித்தான் கூப்பிடுவார் என்கின் றானே!!

2) அவன் வரவு

இல்லம் வந்த தலைவனைத் தலைவி வினவுதலும், தலைவனின் புலமை விடையும்.

வரவுதந்த தலைவனைத்தான் தலைவி நோக்கி
    வந்தவித மெப்படியோ வென்று கேட்டாள்,
அரியிலென்றான் சிங்கத்தின் மீதா என்றாள்
    அயமேறி எனச்சொன்னான் குளமா என்றாள்
பரியென்றான் யாருக்கா யென்று கேட்டாள்
    பத்திரியென் றானுடனே வில்லார் என்றாள்
துரங்கத்தி லென்றவுடன் உள்ளீர் என்றாள்
    தூசியெனச் சொல்லமுகம் திருப்பி னாளே!!

கருத்து:

எப்படியோ வந்துவிட்டார் என்று சும்மா இராமல் தலைவி, "எப்படி வந்தீர்கள்" என்று கேட்கிறாள். தலைவனும் தன் புலமையைக் காட்ட வேண்டும் என்று குதிரைக்கு வேறு பெயர்களாக விளங்கும் அரி (குதிரை/சிங்கம்), அயம் (குதிரை/குளம்), பரி(குதிரை/பரிந்துரைத்தல்), பத்திரி (குதிரை/அம்பு), துரங்கம் (குதிரை/மனம்), தூசி (குதிரை/புழுதி) என்று சொல்லுகிறான். இவற்றின் பொருள்களைத் தவறாக எடுத்துக்கொண்டு தலைவி முகம் திருப்பிச் சினந்து கொள்கிறாள்....

-விவேக்பாரதி
04.05.2018



Comments

Popular Posts