ஊதுகனல்

ஊதிக் கனல்வளர்க்க - பல
    ஊழி நடமிசைக்க
சேதி சுமந்துரைக்க - மின்
    சேர்ப்பை உனக்களிக்கக்
காதில் இனிக்கும்விதம் - கவிக்
    கற்பனையைக் கொடுக்க
மேதினி மொத்தமுண்டு - தம்பி
    மேன்மைக் கவிதைபன்னு !!


சந்தம் கொடுத்துலவ - நதிச்
    சங்கமம் ஆகுதடா !
விந்தை படைத்திடவே - ஒளி
    விண்மீன் தாவுதடா !
மொந்தைக் கள்ளமுதாய் - களி
    மொண்டு கொடுத்திடவே
இந்த இயற்கையுண்டு - தம்பி
    இன்பக் கவிதைபன்னு !

கருத்தைத் தென்றல்தரும் - அதைக்
    காதில் கவனித்துவை
உருவம் மின்னல்தரும் - அதன்
    உணர்வைப் படமாக்கு !
ஒருமுறை வந்துவிட்டால் - மனம்
    ஓயாது கவியுரைக்கும் !
 விரைவில் கவிதைபன்னு - தம்பி
    விசையில் கவிதைபன்னு !

காகிதக் குப்பையென்றே - சிலர்
    கசக்கிப் போட்டாலும்
நோகச் சிலரும்வந்து - பிழைகள்
    நுணுக்கிச் சொன்னாலும்
வேகம் எடுத்துவரும் - மழை
    வேதம் பார்ப்பதில்லை !
தாகக் கவிதைபன்னு - தம்பி
    தன்மைக் கவிதைபன்னு !

அந்தக் கவிதைக்குள்ளே - உன்
    ஆவி ஒளிர்விடட்டும் !
தொந்தரவு தீர்ந்தே - நாடு
   தோன்றும் சுகம்பெறட்டும் !
இந்தத் திறத்தினிலே - நல்
    இசையும் இணைந்திடவே
உந்திக் கவிதைபன்னு - உன்னோ(டு)
    ஊதிக் கனல்வளர்ப்பேன் !!

 -விவேக்பாரதி
09.08.2017

Comments

Popular Posts