இறை ஒருவன்

வாழ்வையொரு வேள்வியாக்கி வாக்குகளை ஆகுதியாய்
    வழங்கவைத்துப் பார்த்திருக்கும் ஒருவன் - அந்த
    வஞ்சகனின் பேரவனே இறைவன் !
தாழ்வையொரு பாடமாக்கித் தன்னிலை உணர்த்திவிடும்
    தண்மையிலே கைதேர்ந்த ஒருவன் - அவன்
    தன்மையினால் தாயந்த இறைவன் !
சூழ்கின்ற பொய்க்கலியில் பலகதைக்குள் கற்பனைக்குள்
    சுடர்வீசும் உண்மைப்பொருள் ஒருவன் - அதன்
    சூக்குமமே தானிந்த இறைவன் !

ஏழ்பிறப்பும் நமைக்கொள்ளும் ஊழ்பிறப்பைப் பார்த்தளந்து
    உச்சிதூக்கப் பாடுபடும் ஒருவன் - அந்த
    ஊமையனின் பேரிங்கே இறைவன் !

கச்சிதமாய் காலமெனும் நூல்படைத்து அசைத்துவைக்கும்
    கலைக்காரக் கோமாளி ஒருவன் - அவன்
    காரியத்தினால் அவனே இறைவன்
அச்சமயம் நீங்குகின்ற அச்சமயத்(து) உள்ளிருந்தே
    இச்சைகொளப் பார்த்திருக்கும் ஒருவன் - உயிர்
    இயக்கமெலாம் கற்றறிந்த இறைவன் !
மிச்சமுள்ள நாட்களிலே மீண்டுவரும் நினைவலையில்
    மீண்டுமீண்டு புரளவைக்கும் ஒருவன் - நமை
    மிரட்டுவதும் அணைப்பதுவும் இறைவன் !
பச்சைகரு நீலம்வெள்ளை பாகுபாடும் இல்லாத
    பரவசத்து சோதியந்த ஒருவன் - இந்தப்
    பாருக்கெலாம் ஒன்றாவான் இறைவன் !!

-விவேக்பாரதி
08.08.2017

Comments

Popular Posts