பறவைப் பேச்சுகள்


காலையில் இந்தப் பறவைகள் எல்லாம் 
கலகல கலவெனப் பேசுவ தென்ன? 
நாளில் முழுதும் நகரின் இரைச்சல் 
நடுநடு வேயிம் மனிதரின் கூச்சல்,
வேளை தோறும் செல்போன் வழியே 
முனுமுனு முனுவெனப் பேச்சின் நமைச்சல் 
காலம் மறந்து போமள விற்குக் 
காணொலிக் குரல்களின் காட்டுக் குரைப்பு 

இவற்றின் நடுவே பேச முடியா 
இனிய செய்திகள் அனைத்தையும் கூட்டிக்  
கவலை இன்றிப் பறவைகளிங்கே
கத்திக் கத்திப் பேசுகின்றனவோ! 
எவர்க்கும் இன்றைக் கரிதாய்த் தோன்றும் 
எளிய காலைப் பொழுதில் இவற்றின் 
சுவைகொள் குரலை உற்றுக் கேட்டுச் 
சொல்லும் பொருளை ஊகிக்கின்றேன்! 

எறும்பைப் போலத் தெரியும் மனிதன் 
எத்தனை ஆட்டம் போடுகிறானெனக் 
குறும்புப் பார்வை பார்த்ததைத் தம்முள் 
குழுக்களாக பகிர்கின்றனவோ?  
அருமை நிலத்தை அழித்துக் காற்றை 
அவன்பங் கிற்குக் கெடுத்ததும் இன்றி 
விரும்பி வானும் கேட்கின் றானென
வெறுப்புப் புகார்கள் விளம்பும் குரலோ?

ஒன்றை ஒன்று காலைப் பொழுதில் 
உள்ளம் பூரித் தழைக்கும் ஒலியோ?
நன்று மனிதன் எழுவதற் குள்ளே 
நாட்டைப் பிடிக்கும் வழிகள் பற்றி 
ஒன்று கூடிப் பேசிடலாம் என 
உரைகள் நிகழ்த்தும் அழைப்பே இவையோ?
இன்னும் எத்தனை வசையோ? ஆனால்
எளியேன் அனைத்தும் இனிதாய்க் கண்டேன்! 

நீட்டிப் பாடும் குயிலின் குரலில் 
நிழலின் அமைதி நிறையக் கண்டேன் 
பாட்டுப் பாடிப் பறக்கும் கிளியில் 
பரவச வானின் பரப்பைக் கண்டேன் 
கூட்டமாகக் குருவிகள் சேர்ந்து 
கொஞ்சிய காதலில் கூடிக் கொண்டேன்!
நாட்டில் இனியேன் மானுட உருவம்? 
நான் என்றைக்குப் பறவையாவேனோ??

-விவேக்பாரதி
04.08.2024
06.15 AM

Pic courtesy - Dawn chorus by Elisabeth Carolan.

Comments

Popular Posts