கண்ணதாசக் கவி வாழி



ஹூஸ்டனில் ’பாரதி கலை மன்றம்’ என்ற தமிழ் அமைப்பு இயங்கி வருகிறது. தமிழ்ப் பள்ளிகள் நடத்துதல், தமிழர் மரபு கலைகளைப் பயிற்றுவித்தல், தமிழ்க் கொண்டாட்டங்களை நடத்துதல், தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் என அரை நூற்றாண்டாக இந்த அரும்பணியை அங்குள்ள தமிழர்கள் இம்மன்றத்தின் மூலம் செய்து வருகின்றனர். 

ஹூஸ்டன் மட்டுமின்றி அருகிலுள்ள நகர்களில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் முக்கிய கோயிலாக விளங்கும், மீனாட்சி அம்மன் கோயிலை மையமாகக் கொண்டு பாரதி கலை மன்றம் செயல்பட்டு வருகின்றது. 
அதன் 50-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாகவே எங்கள் ’பாரதி யார்?’ நாடகம் அரங்கேறியது. 

இரண்டரை நாட்கள் நடந்த பிரம்மாண்ட விழாவில் பாரதி மாதா பேரணியில் தொடங்கி, விஜய் யேசுதாஸின் கச்சேரி வரை இயல், இசை, நாடகத் தமிழின் கொண்டாட்டங்கள் களை கட்டின. 

இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் தமிழருவி மணியன் ஐயா, இசைக்கவி ரமணன் ஐயா, பர்வீன் சுல்தானா அம்மா, இலக்கியச்சுடர் தா. ராமலிங்கம் ஐயா, நாதன் ஐயா, நகைச்சுவை நயாகரா மோகனசுந்தரம் ஐயா, கணேஷ் ரகு ஐயா, நாடறிந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர். 

நாங்கள் தங்கியிருந்த அதே விடுதியில் அவர்களும் இருந்ததால், நிறைய அளவளாவும் நேரம் கிடைத்த பேற்றை, என்றும் நன்றியுடன் நினைவுகூர்வேன்.  பாரதி கலைமன்றத்தின் பொன்விழாவில் இரண்டாம் நாள், இசைக்கவி ரமணன் ஐயா தலைமையில், முன்பு சொன்ன அத்தனை பேரறிஞர்களும் இணைந்து நடத்திய ‘காலங்களில் அவன் வசந்தம்’ என்ற கண்ணதாசன் நிகழ்ச்சி, வரலாற்றின் பக்கங்களில் பதிவேற்ற வேண்டிய அற்புதமான நிகழ்ச்சி. அதில் அடியேனும் பங்கு கொண்டு, கண்ணதாசனைப் போற்றிக் கவிதை படைக்க அரும் வாய்ப்பு கிடைத்தது. 

எங்கள் அனைவரையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு, உரிய நேரத்தில் தேவையானவை அனைத்தையும் சேர்ப்பித்து, உற்ற தோழராய், உகந்த ரசிகராய், அண்ணனாய், சக நடிகராய் உடனிருந்து, நான் கவிதை வாசித்தபோது அதை அற்புதமாய்க் காணொலியும் ஆக்கிய ஹூஸ்டனின் திரு கணேஷ் ரகு அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவன் ஆகிறேன். 

சிறியனுக்குக் கிடைத்த இத்தகு பெருமேடை, இசைக்கவி ரமணன் ஐயாவின் ஏற்பாடு. அவருக்கு என்மீது இருக்கும் கருணை, பராசக்தியின் ஏற்பாடு. அதற்கு இந்த ஜென்மத்தில் நன்றி சொல்லித் தீராது. 

இதோ நான் வாசித்த கவிதை, 

சிந்துத் தமிழ்க்கவி துள்ளி எழுந்திட 
வந்து பிறந்ததோர் கவிஞன் - அவன்
வாழ்வை எழுதிய புலவன் - புது 
வார்த்தை நடங்களின் கலைஞன் - ஒரு 
சந்தனக் காற்றென நெஞ்சகக் கூட்டினில்
மந்திரப் பாட்டென நந்தமிழ் நாட்டினில்
தங்கி இதம்செய்யப் பிறந்தான் - தமிழ்த்
தாய்க்குக் கவிதர மலர்ந்தான் 

முந்தை இலக்கிய முத்துக்கள் ஏட்டினில்
தங்கிச் சிறைப்பட்ட பொழுது - அதைத்
தாவி எடுத்தனன் தொழுது - கவித்
தேனில் குழைத்தனன் அமிழ்து - மக்கள்
தங்கள் மனங்களில் சங்க இலக்கியம்
கங்கை நதியின நின்று நிலைத்திடத்
தாமறியாமலே நுழைத்தான் - அந்தத்
தனித்துவத்தினில் ஜெயித்தான்

பட்ட அனுபவப் பட்டறிவே இவன் 
பாட்டின் பொருளெனப் பதியும் - அந்தப்
பாதை நமக்கென விரியும் - அது
கீதை! தருணத்தில் புரியும் - அந்தப்
பாடத்தி லேவரும் ஞானத்தி லேநம
தோடத்தி லேசுக கீதத்தி லேயதைப் 
பாடிக் கிடப்பதே போதும் - அந்த 
மோடிக் கிறக்கமே வேதம்! 

மெட்டுகள் கேட்டதும் வார்த்தை மழையது 
கொட்டிடும் நாதப் பிரவாகம் - அதில் 
கொஞ்சும் தமிழ்க்கவி வேகம் - அவன் 
கோபத்திலும் தூறும் மேகம் - ஒரு 
சின்னக் குழந்தையின் சன்னச் சிரிப்பொலி
மின்னல் பிடிப்பதை ஒத்த விரல்பிடி 
சந்திரன் போல்முக அம்சம் - அவன் 
சத்தியம் பாரதி வம்சம்! 

கண்ணனைப் பாடிடும் போழ்திலெல்லாம் அவன் 
தன்னைக் கரைக்கின்ற நெஞ்சம் - வெள்ளி 
தங்கம் புரள்கின்ற மஞ்சம் - தெய்வத் 
தத்துவங்கள் அதில் மிஞ்சும் - கையின் 
கிண்ணங்களாலதன் எண்ணங்களால்வந்த 
வண்ணங்களால் தனித் திண்ணங்களால் 
காலத்தை வென்றனன் தோழி - அந்தக் 
கண்ணதாசக் கவி வாழி!!

(கவிதையின் காணொலியைக் காணப் படத்தைச் சொடுக்கவும்)

விவேக்பாரதி
25.08.2024
07.20 PM

Comments

Popular Posts