மரங்களை அர்ச்சிக்கும் கவிதைகள்


புலமி என்ற புனைப்பெயரை கொண்ட அம்பிகாவர்ஷினி அவர்களது 'தேக்கு மரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்' என்ற கவிதை தொகுப்பு, பல வருடங்கள் கழித்து என் கண்ணில் பட்டது. 

புத்தகம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி அம்பிகா அக்காவால் எனக்கு பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அதை 25-ம் தேதி படித்து முடித்திருக்கிறேன். அப்போதே புத்தகத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுத வேண்டும் என யோசித்து, பிறகு எப்படியோ அது மறந்தே போயிருக்கிறது. நேற்று அந்த புத்தகம் கண்ணில் பட, மீண்டும் ஒரு முறை அந்த மேகமூட்டத்துக்கு இடையே கவிதா விமானத்தில் சஞ்சரித்தேன். 
நவீனத்துவ கவிதைகள் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் சிலரில் கவிஞர் அம்பிகாவர்ஷினியும் ஒருவர். எங்களது நட்பு எழுத்து.காம் முழுமூச்சில் இயங்கிக் கொண்டிருந்தபோது தொடங்கியதாக நினைவு. அங்கே அவர் ஒரு நந்தவனமாக மணம் வீசிக் கொண்டிருந்தபோது, நான் சிறு துரும்பு. 

அந்த நந்தவனத்தை இந்தப் புத்தகத்தில் அடர்த்தி மிகுந்த சந்தனக்காடாய் தரிசித்தேன். அன்றாட நிகழ்வுகளையும், அதில் அகம் காணும் கவிதை பரவசத்தையும், நவீனத்துவ பாணியில் பேசும் இந்தக் கவிதை தொகுப்பு, வாசிப்பவர்களை வாசனை நிறைந்த மரக்காட்டின் வழியே கூட்டிச்செல்லும். 

எண்பத்தி எட்டு பக்கங்களில் எங்கு பார்த்தாலும் மரங்கள். மரம், கிளை, இலை, சருகு, கனி, காய், பூக்கள், வேர், மரத்தின் நடுப்பகுதி வெட்டுப்பட்ட வளையம் என மரங்களைச் சார்ந்தே இக்கவிதைகள் பல்கிப் பெருத்து கிடக்கின்றன. முன்னுரையின் முடிவில் முத்தாய்ப்பாய் ஒற்றைச் சொல் கவிஞர் அம்பிகாவர்ஷினியின் கவிதை பரீட்சையத்தையும் அவரது இலக்கிய அனுபவத்தையும் கூறுகிறது. "இது கவிதை தான்" என்ற அவரது ஆணித்தரமான முடிபு, அவர் எத்தனை கவிதைகளை கடந்து வந்திருப்பார் என்பதோடு பொருத்திப் பார்க்கும்போது சுகமாய் இருக்கிறது. 

புத்தகம் முழுக்கவும் நிறைய வரிகளை அடைப்புக் குறிக்குள் நிறுத்தி வைத்து, பலமுறை ரசித்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றை பகிரவும் ஆசை கொள்கிறேன். 

"சுடர்விடும் மெழுகுவர்த்தியில் 
ஒளிர்ந்து ஒளிந்து 
உருகுகின்றன நட்சத்திரங்கள் 
எப்படி அச்செடுக்க 
ஒளியாகவா? மெழுகாகவா?"

இதே கவிதையில் வரும் "தேனிற" என்ற பதம் மெழுகுவர்த்தியின் முறுவலை கண்முன் நிறுத்தியது. 

"இயல்பினை 
மொழிக்கலப்பு செய்ததாகவே 
விடியச் சொல்கிறது"

என்று விடியலுக்கு இவர் தரும் புதிய விளக்கம், வைகறைகளை இன்னும் ஆழமாய் ரசிக்க வைக்கிறது. 

கவிஞர் குட்டி அம்முக்கு எழுதிய கவிதைகள், வாசிப்பவர்களின் வாழ்க்கையில் நிறைய குட்டி அம்முக்களை நினைவுபடுத்தும். அதில் குறிப்பாக 'அறியா முத்தம்' என்ற கவிதை, இருக்கையில் இருந்து உங்களை துள்ளிக் குதிக்கச் செய்யும் என்பதை உறுதியாய்ச் சொல்வேன். அதே வரிசையில் 'மண்ணாலாவது' என்ற கவிதை, மிக ஆழ்ந்த தத்துவத்தின் வெளிப்பாட்டை சிறு குழந்தையின் விளையாட்டு வழி சொல்லும் கவிஞரின் தனித்திறனாக ஜொலிக்கிறது. 

'கழற்றி எறிந்தவர்கள் யாரவர்கள்' என்ற தலைப்பிலான கவிதைக்கு கீழே என் பென்சிலால் சாட்டையடி என்று குறிப்பெழுதி இருக்கிறேன். அதை அப்படியே சொல்லி படிக்க வைப்பதே சிறந்தது என்று தோன்றுகிறது. 

'காட்டிக்கொடுக்கப்பட்ட தேவன்' என்ற கவிதை மாறுகோணத்தில் மணக்கிறது. ஒரு புகைப்படம் இன்னொரு புகைப்படமாக உருமாறும் transition effect நடக்கிறது. நீல நிற இயேசுவை, முட்கிரீடம் அணிந்த கிருஷ்ணனை தரிசிக்கச் செய்கிறது. 

முன்னர் சொன்ன குழந்தையின் விளையாட்டு வழி தத்துவம் சொல்லும் கவிஞரின் திறத்திற்கு இன்னொரு சான்று 'மழலை வெயில்' என்ற கவிதை. எனக்குத் தெரிந்து மதியம் சுட்டெரிக்கும் வெயிலை கூட மழலையாய் ரசிக்க தெரிந்தவர் கவிஞர் அம்பிகாவர்ஷினி என்று நினைக்கிறேன். 

நவீனத்துவத்தின் காட்சியாக இவர் வரைந்திருக்கும் ஓவியம் ஒன்று கண்முன் தெரிகிறது. அதில் தான் எத்தனை வண்ணங்கள். 

"மரமாகிப்போன உணர்வுகளிலிருந்து 
கொத்துக்கொத்தாய் 
பழுத்து தொங்குகின்றது கண்ணீர்"

என்ன ஒரு காட்சி பார்த்தீர்களா... தன் கண்ணீரைக் குறிக்கும் போது கூட கவிஞர் மரத்துடனே இருக்கிறார். 

மரங்களை வெட்டி அரைத்து கூழ் செய்து காகிதம் பிறப்பதாக அறிகிறோம். அப்படி பிறந்து வந்த இந்தக் காகிதங்கள் தங்கள் தாயான மரத்திற்கு நன்றி சொல்லும் அர்ச்சனை பூக்கள் என்றுதான் நான் கருதுகிறேன். புத்தகம் முழுக்க மரங்கள். மரங்கள் தோறும் கிளைகள். கிளைகள் தோறும் இலைகள். இலைகளின் நடுவினில் எல்லாம் கசியும் சிரிப்பின் இசை. அந்த இசை கொடுக்கும் இதழ்கள் கவிஞர் அம்பிகாவர்ஷினி. 

மின் நிறுத்தம் நிகழ்ந்திருக்கும் இந்த மதியப் பொழுதில், இந்த நூலனுபவத்தை எழுதி முடிக்கும் போது, எங்கிருந்தோ வந்த காற்று அத்தனை மரங்களையும் அசைக்க, வீட்டுக்குள் காற்று புகுந்து வெளியேறி, இல்லத்தை ஒரு புல்லாங்குழல் செய்கிறது. வெக்கை தணிந்து மனம் மகிழ்கிறது. இதை விடவா ஒரு நல்ல சகுனம் வேண்டும். 

அக்கா புலமி என்கிற அம்பிகாவர்ஷினிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

அன்புடன் 
விவேக்பாரதி 
17.08.2024
03.30 PM

Comments

Popular Posts