வடபழநி வசந்தம்


(வடபழநி பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முதன்முறை சென்றபோதே தனது திருக்காட்சியைக் காட்டி அவன் ஆட்கொண்ட அனுபவம்)

ஒருநாள் மாலையிலே - கார்த்திகை 

    உகந்த மாதத்திலே 

திருநாள் முருகனுக்கு - பண்டிகை

    திசையெல்லாம் சிலிர்ப்பு! 


அந்தத் திருநாளில் - அம்பிகை 

    அருளில் நிறைந்தவராம் 

எங்கள் இசைக்கவியார் - என்றனை 

    அழைத்தார் நிகழ்ச்சிக்கு! 


அழைத்த அந்தவிடம் - சென்னையில் 

    அழகு மிகுந்தவிடம்  

பழகிய மாநகரில் - அதுவரை 

    பாராப் புதியவிடம்! 


கடற்காற் றோடிவந்தே - பணிவுடன் 

    கந்தன் புயம்தழுவும் 

வடபழநிக் கோயில் - அடியவர் 

    வாழும் திருக்கோயில் 


உள்ளே நுழைந்தவனை - அற்புத 

    உரிமைச் சிரிப்புடனே 

பிள்ளையார் வரவேற்றார் - சிறியவன் 

    பிரியத்துடன் தொழுதேன்! 


அங்கதன் பின்புறத்தில் - அடடா

    ஆலயம் கொண்டவெழில் 

இங்கிந்தக் கவிதையிலே - அடியவன் 

    எப்படிச் சொல்லிடுவேன்! 


செம்மைத் திருத்தலத்தில் - இசைக்கவி 

    செல்வாக் கிருந்ததனால் 

அண்மையில் சென்றுவிட்டேன் - ஆண்டவன் 

    அருகில் அமர்ந்துகொண்டேன்! 


கண்ணெதிரே முருகன் - தனியொரு 

    கம்பிரப் புன்னகையை 

வண்ண இதழ்களிலே - அழகுடன் 

    வரைந்து நின்றிருந்தான்! 


பக்தர்கள் பின்புலத்தில் - அரோகரா 

    பக்தியில் பாடிநிற்க 

பக்கத்தில் நாதசுரம் - இசைகளின் 

    பந்தி நடந்திருக்க


மந்திரங்கள் ஒலிக்க - திருப்புகழ் 

    மங்களப் பாட்டிருக்க,  

அந்த ஒருகணத்தில் - சிலையதன் 

    அழகுத் திருமுகத்தில் 


தண்டாயுத பாணி - அவனது 

    தாமரை முகம்கண்டேன் 

கண்ணீர் வழிந்திடவே - என்முனம் 

    கந்தன் உருக்கண்டேன்! 


பார்த்துக் கண்ணசைத்தான் - அப்பப்பா 

    பரவசம் என்னசொல்வேன் 

வேர்த்து வேர்த்துவழிய - அவன்முக

    விந்தையைக் கண்டிருந்தேன்! 


முருகன் விழியழகை - மொழிந்திட 

    முத்தமிழ் பற்றவில்லை 

சிறுவன் இதழ்விரித்து - நோக்கியே 

    சிரித்தது மறக்கவில்லை! 


சிற்சில பொற்கணம்தான் - பின்னரந்தச்

    சின்னவன் கண்மறைத்தான்! 

பெற்றதை கைத்தொலைத்து - அழுமொரு 

    பேதையைப் போல்தவித்தேன்! 


சுற்றிச் சுற்றிவிழித்தேன் - கண்ணீரின் 

    துளிகளிலே நனைந்தேன் 

குற்றம் புரிந்ததுபோல் - உள்ளெலாம் 

    குமைந்து பரிதவித்தேன்! 


முன்னால் அமர்ந்திருந்த - இசைக்கவி 

    முல்லை மலர்கொடுத்து 

பன்னரும் வெண்பாவில் - அந்தாதி

    பாடெனச் சொல்கொடுத்தார்! 


தொடக்கம் உலகெனும்சொல் - அதிலே 

    தொடங்கிய தென்னுலகம் 

வடபழநிக் கோயில் - அதன்பின் 

    வாழிடம் ஆனதம்மா!!


-விவேக்பாரதி

09.08.2024

08.15 PM


Comments

Popular Posts