உட்கார்ந்தே இருக்கும் மனிதன்


எங்கள் "பாரதி யார்?" நாடகத்துக்காக அமெரிக்கா வந்துள்ளோம். பெரும் தவமாய் நிகழும் இந்த பயணத்தில் இந்தச் சிறு அணிலுக்கும் வாய்ப்பு கிடைத்த அதிசயத்தின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னுமே மீளவில்லை. இதற்கிடையில் மேற்கு உலகத்தை 20 மணி நேர விமான பயணத்துடன் தான் தொடங்க வேண்டும் என்பது, நல்ல விருந்தை பாகற்காய் சட்னியோடு தொடங்குவது போல் ஆகிவிடுவதைத் தவிர்க்க வழியில்லை. களைப்பூட்டிய அந்த விமான பயணத்தைப் பற்றி இப்படி எழுதத் தோன்றுகிறது... 

உயர உயரப் பறந்தாலும் 
மனிதன் 
ஊர்க்குருவி கூட ஆவதில்லை! 

இரும்புச் சிறகு விரிக்கும் 
வானத்திலும் அவன் 
உட்கார்ந்தே இருக்கிறான்! 

காற்றின்றி வாழவே முடியாதவன்
காற்றின் நடங்களைக் 
கண்ணாடி கூண்டுக்குள்ளிருந்துதான்
காண்கின்றான்! 

நிலங்களுக்கு மேலே பறந்தாலும்
அவன் மனத்திலிருந்து
அவற்றின் எல்லைக் கோடுகள் 
அழியவேயில்லை!

கடல், மலை, சமவெளி, 
வயல், நதி, சாலை எனக் கீழே 
எத்தனையைக் கடந்தாலும் 
கூச்சல் குப்பையாலேயே அமைகிறது
அவன் கோபுரம்!

ஒரு பறவை
உண்ணும், 
பயணிக்கும், 
இளைப்பாறும்! 
மனிதனோ இம்மூன்றையும் வானில் 
ஒரே நேரத்தில் செய்துவிடுகிறான்!
ஆனால் மூன்றும் மூன்றிலும் கலந்த
மூணாந்தரம்! 

விமானத்தின் ஜன்னல் வழியே 
மேகங்களைப் பார்க்கும்போது 
அந்த அலாதிகளுக்கு நடுவே மனிதன்
பாவமாய்த் தெரிகிறான்!
நினைக்காமல் உருமாறும் அவற்றுக்கு 
இவன் குணத்தைத்தான் 
உவமை சொல்லத் தோன்றுகிறது! 

ஒரு நாள் முழுக்க 
உட்கார்ந்தே பயணித்து வந்து 
அதன் களைப்பில் 
ஒரு வாரம் ஓய்வெடுத்தும் 
சோர்ந்துவிழும் மனிதனைக்
கண் சிமிட்டிப் பார்க்கிறது
அதையும் தண்டிய தூரத்தைப் 
பறந்தே வந்த பறவை!!

-விவேக்பாரதி
25.08.2024
11.40 AM 

Comments

Popular Posts