ஜெட்லாக் என்னும் மாயநிலை


அமெரிக்காவுக்கு வந்ததும் இங்கு இருப்பவர்கள் வணக்கத்தோடு கேட்கும் முதல் கேள்வி, "ஜெட்லாக் சரியாகி விட்டதா" என்பதே. 

இந்த ஜெட்லாக் எனப்படுவது யாதெனின், 

உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் நேர வித்தியாசத்தை அறியாமல் உடல் குழம்பிப் போகும் ஒரு மந்த நிலை. 

நம் ஊர் நேரத்திற்கு உடல் உண்டு, உறங்கிப் பழகி இருக்கும். அதிலிருந்து 12 மணி நேர வித்தியாசம் உள்ள மற்றொரு ஊருக்கு பயணிக்கும் போது, கைக்கடிகாரத்தை அந்த ஊர் நேரத்திற்கு மாற்றிக் கொள்வது போல உடல் கடிகாரத்தை மாற்றிக் கொள்ள முடியாது.  அப்போது எது இரவு எது பகல் என்று தெரியாமல் நம் உடல் குழம்பும். 

நமது ஊர் நேரத்திற்கு அந்த ஊரில் பகலாக இருக்கும். அந்தப் பகலில் தூங்கி வழிய நேரும். 

நமது ஊர் பகல், அந்த ஊர்களில் இரவாக இருக்கும். கொட்டக் கொட்ட விழித்திருந்து, ஆளற்ற வீதிகளில் உலாத்த வேண்டியதாய் வரும். 

இந்த நிலையைத்தான் ஜெட்லாக் என்று சொல்கிறார்கள். 

அமெரிக்கா வந்திருக்கும் எங்கள் குழுவில் முதல் இரண்டு நாட்களிலேயே இந்த ஜெட்லாக் மாயப்பிரதேசத்தை நான் கடந்துவிட்டேன். அதன் தத்துவம் மிக எளிமையானது. பகலில் எத்தனை உறக்கம் வந்தாலும், அதை பயணக் களைப்பு என்று தவறாக புரிந்து கொள்ளாமல், விழித்திருக்க வேண்டும். 

இரவில் எப்பாடுபட்டேனும் தூங்கி விட வேண்டும். இரவு தூக்கத்திற்கென்று மெலடோனின் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள். அதில் கூட குறைந்த அளவை பயன்படுத்தி இரவுத் தூக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். 

வந்து இறங்கிய சில நாட்களில், மதிய தூக்கத்தை குறைத்து இரவு தூக்கத்தை கட்டாயம் ஆக்கினால் இந்த மாய நிலையின் பிடியிலிருந்து உடலை நாம் விடுவித்துக் கொள்ள முடியும்.

எப்படியோ எனக்கு இந்த ஞானோதயம் கிடைக்க, ஜெட்லாகைப் பற்றி இப்படி ஒரு கவிதை தோன்றியது. 

துயிலே துயலே எங்கே தான்நீ 
தொலைந்து போனாயோ 
தொடர்பில்லாமல் வந்து சென்றும் 
தொல்லையா ஆனாயோ 
முயலாமல் நான் இருந்தபோது 
முட்டிக் கிடந்தாயே
முதுகை நீட்டிப் படுத்தபோது 
முறைத்துக் கொண்டாயே!

எட்டு மணிநேரங்கள் உன்னோ(டு)
இருக்கச் சொல்கின்றார்
எழுந்து கொண்டே உறங்கும்போது 
எப்படி எண்ணுவது? 
பட்டென்று சிலர் படுத்த உடனே 
பரிசாய்த் தூங்குகிறார் 
படுக்கையிலே வாழ்கையில் எப்படி 
படுத்ததும் தூங்குவது? 

உறங்குதல் போலும் சாக்கா(டு) உறங்கி 
விழிப்பது போல் பிறப்பாம்
ஒருவன் அந்நாள் தாடியை தடவி 
உரைத்துப் புன்னகைத்தான் 
கிறங்குதல் போலும் உறக்கம் கிறங்கி 
நடப்பது போல் விழிப்பு 
கிட்ட இருந்தும் எட்டாதது உன் 
கிளர்ச்சிப் பெரு நடிப்பு! 

மது குடுவைக்குள் விழுந்தது போல 
மதர்ப்பில் வீங்கும் முகம் 
மனத்தடத்தில் மழைக்காலம் போல் 
மந்தப்படும் இதயம் 
விதவிதமாக இதையே கேட்கும் 
விந்தை உபசரணை 
விரைவில் இயல்பாய் பழக உன்னுடன் 
வேண்டும் அனுசரணை! 

உன்னை மீண்டும் ஒழுங்காய் தழுவும் 
உண்மை வேண்டுகிறேன் 
உரிமை யின்றி தொடுவதில்லை நான் 
உறவை வேண்டுகிறேன் 
என்னை உன்னில் கலக்கும் நாள்தான் 
எங்கே தேடுகிறேன் 
ஏக்கப் பல்லவி தீர்க்கும் உன் மடி 
என்றே பாடுகிறேன்!! 

-விவேக்பாரதி
29.08.2024
06.50 AM

படம் - Meta AI

Comments

Popular Posts